மேயர் நமச்சிவாயம் சிவராஜ்
சென்னை நகர மேயராக இருந்த ராவ் பகதூர் நமச்சிவாயம் சிவராஜின் திரு உருவச்சிலை சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையச் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ளது. 1994 டிசம்பர் 6 அன்று அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா இச்சிலையைத் திறந்துவைத்துள்ளார். இச்சிலையின் தகவல்களைச் சற்று சிரமப்பட்டே படிக்க வேண்டியுள்ளது. பராமரிப்பற்று இருக்கிறது இச்சிலை. சிவராஜ் மெட்ராஸ் மாகாணத்தைச் சார்ந்த கடப்பாவில் 1892, செப்டம்பர் 29இல் பிறந்தவர். இவரது தந்தை தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர். பின்னர் புத்த மதத்தைத் தழுவினார். சென்னை மாநிலக் கல்லூரியில் 1911இல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் 1915இல் வழக்கறிஞர் பட்டம் பெற்று சர் சி பி ராமசுவாமி அய்யரிடம் ஜூனியராகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். செங்கல்பட்டு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1957 முதல் 1962வரை இருந்துள்ளார். மேயர் சிவராஜ் 1964 செப்டம்பர் 29 அன்று காலமாகியுள்ளார்.
டாக்டர் ரங்கச்சாரி
டாக்டர் ரங்கச்சாரியின் முழு உருவச் சிலை சென்னை பொது மருத்துவமனையின் முகப்பில் நுழைவாயிலருகே நிறுவப்பட்டுள்ளது. எப்போதும் கையைப் பின்புறம் கட்டிவைத்தபடி நடக்கும் பழக்கம் உடையவர் இவர் என்பதால் இச்சிலையும் அப்படியே அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நவம்பர் 6, 1939 அன்று மெட்ராஸ் கவர்னர் லார்டு எர்ஸ்கின்னால் திறந்துவைக்கப்பட்டது. முழுக்க முழுக்க பொதுமக்கள் தந்த நிதியால் உருவாக்கப்பட்டது இச்சிலை.
சருக்கை ரங்காச்சாரி மெட்ராஸ் மாகாணத்தைச் சார்ந்த பிரசித்தி பெற்ற மருத்துவர். இவர் 1892 ஏப்ரலில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணமாச்சாரி மெட்ராஸ் மாகாண அரசாங்கப் பொறியியலாளர். ரங்கச்சாரியையும் பொறியியலாளராக்க விரும்பினார். ஆனால் ரங்கச்சாரி மருத்துவராகவே விருப்பம் கொண்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை கும்பகோணத்தில் முடித்தார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே படித்து முடித்தபின் தான் மருத்துவம் படிக்க இருப்பதாக அறிவித்தார். இங்கிலாந்து சென்று படிக்க விரும்பினார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அந்தக் கால ஆச்சார பிராமணர்கள் கடல் தாண்டி செல்வது தடைசெய்யப்பட்டிருந்ததாலும் அவரால் அங்கே சென்று படிக்க இயலவில்லை. ஆனால் வெகு சீக்கிரமே அனைத்துத் தடைகளையும் கடந்து பலரும் அறிந்த மருத்துவரானார் ரங்கச்சாரி. நாகப்பட்டிணம், தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பல இடங்களில் பணிபுரிந்தார் இவர். 1919இல் மெட்ராஸுக்கு மாற்றப்பட்டார். அனைவரும் அறிந்த பூங்கா நகரிலிருந்த பொது மருத்துவமனையில் பணியாற்றினார் இவர். எந்நேரமும் மக்களுக்குச் சேவையாற்றினார். தனது நோயாளிகளைப் பார்ப்பதற்குச் செல்வதற்காக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினார். பின்னர் தென்னிந்தியாவில் உள்ள தனது நோயாளிகளைப் பார்ப்பதற்காக சொந்தமாக ஒரு சிறிய விமானத்தையே வாங்கினார். அந்தக் காலத்தில் அது ஒரு அரிதான செயல். தனது புத்திசாலித்தனம், மருத்துவத்திறமை அளவுக்கு மனித உளவியலையும் நம்பினார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஏராளமான மருந்து மாத்திரைகளை, விலை உயர்ந்த ஊசி மருந்துகளை அளிப்பதை ஊக்குவிப்பதில்லை இவர். குழப்பமிகுந்த நோய்களுக்குக் கூட மருந்துகளுக்குப் பதில் மனித உளவியல் சார்ந்தே மருத்துவம் அளித்தார். நோயாளிகளின் அந்தஸ்தை அவர் பொருட்படுத்தியதில்லை. வசதி மிக்கவர்களையும் வறியவர்களையும் ஒன்றுபோலவே பாவித்தார். மிக வறிய நோயாளிகளுக்குத் தேவையான தினசரிச் செலவுகளுக்கு தன் கையிலிருந்து பணமளிப்பார். டாக்டர் ரங்கச்சாரிக்குக் குழந்தைகள் இல்லை. தனது 52ஆவது வயதில், ஏப்ரல் 1934இல் கடுமையான டைபாயிட் நோயால் அவதியுற்று மாண்டுபோனார் இவர். மிக குறைந்த வயதில் ஏற்பட்ட இவரது மரணம் மருத்துவத் துறைக்கும் நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இழப்பை நினைவுகூரும் விதத்தில் நிறுவப்பட்டுள்ள இவரது சிலையில் அரிதான மருத்துவத் திறமைக்காகவும் எல்லையற்ற மனிதநேயத்துக்காகவும் சிலை நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேயர் எஸ் சத்தியமூர்த்தி
1939 - 40இல் சென்னை மேயராகப் பணியாற்றிய சத்தியமூர்த்தியின் சிலை சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நிறுவப்பட்ட போது மேயராக திரு சி குசேலர் இருந்துள்ளார். இந்தியப் பிரதமர் ஜவஹர் லால் நேருஜி 1963, ஜூன் 14 அன்று திறந்துவைத்த சிலை இது.
காங்கிரஸ் அரசியல்வாதியும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான சத்தியமூர்த்தி ஆகஸ்டு 19, 1887 அன்று மதுரை மாவட்டத்தில் பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம்பெற்ற பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூரும் விதத்தில் சென்னையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இப்பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புமை பெற்று தமது பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார். ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.
அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரௌலத் சட்டத்திற்கெதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார். 1930ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். 1942ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28, 1943ஆம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார் சத்தியமூர்த்தி