அப்படித்தான் நெஞ்சில் ஒரு முள்ளையும் போட்டுவிட்டு உட்கார்ந்தேன். டைட்டிலில் சில ஆச்சரியங்கள் இருந்தன. படம் 1981 டிசம்பரில் தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருந்தது. படத்துக்கு இசை இளையராஜா இல்லை. பாடல்களை வாலி, வைரமுத்து போன்றோர் எழுதியிருக்கவில்லை. புலமைப்பித்தன், எம்.ஜி.வல்லபன், பொன்னடியான் ஆகியோர் எழுதியிருந்தார்கள். நடிகை பூர்ணிமா ஜெயராமனுக்கு இதுதான் முதல் படம். அதே போல் படத்தில் பிரதாப்பின் தங்கையாக நல்லெண்ணெய் சித்ரா நடித்திருந்தார். பிரதாப், சிவச்சந்திரன், கல்கத்தா விஸ்வநாதன், வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.சந்திரன், சத்ய கலா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். பொன்னடியானுக்கும் இதுதான் முதல் படம் என இணையத்தில் தகவல்கள் கிடைத்தன.
பிரதாப்பின் மண நாள் அன்று மணப் பெண் ஓடிப்போய்விடுகிறாள். அந்த அதிர்ச்சியில் அவர் குடிகாரராகிவிடுகிறார். ஊட்டியில் வசிக்கிறார். அதே ஊரில் தான் கல்கத்தா விஸ்வநாதனும் வசிக்கிறார். அவரது குடும்ப நண்பரின் மகன் தான் பிரதாப். கல்கத்தா விஸ்வநாதனின் மகன் காதலுக்கு அவர் எதிர்ப்பாக உள்ளார். ஆகவே, அவன் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொள்கிறான். மருமகளை அவர் பார்த்ததேயில்லை. மணம் முடித்து குழந்தையும் பிறந்த ஓரிரு ஆண்டுக்குள் மகன் விபத்தில் இறந்துவிடுகிறான். தகவல் அறிந்த கல்கத்தா விஸ்வநாதன் கைம்பெண்ணான மருமகள் ராதாவையும் பேரனையும் தன்னுடன் வந்துவிடுமாறு கடிதம் அனுப்புகிறார். அவள் ஊருக்குப் புறப்படும் நேரத்தில் அவளுடைய தோழி மாதவி (பூர்ணிமா) அங்கு வந்து சேருகிறாள். அவளுடைய காதலன் அவளை ஏமாற்றிவிட்டதால் எங்குபோவது எனத் தெரியாமல் தோழியைத் தேடி வந்திருக்கிறாள். விஷயம் அறிந்த ராதா, மாதவியையும் தன்னுடன் ஊட்டி வரும்படி சொல்கிறாள். மாதவி சம்மதிக்கிறாள். ரயிலில் புறப்படுகிறார்கள். ரயில் விபத்துக்குள்ளாகி விடுகிறது. ராதா இறந்துவிடுகிறாள். மாதவி, ராதா என்னும் பெயரில் கல்கத்தா விஸ்வநாதன் வீட்டுக்கு வருகிறாள்.
அங்கே பிரதாப் கண்ணில் ராதா படுகிறாள். அவனுக்கு அவள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது. பிரதாப்புக்கு நிச்சயித்திருந்த மணப்பெண் மண நாள் அன்றே ஓடிவிட்டாள் என்பதை அறிந்துகொண்ட ராதாவுக்கு அவன்மீது ஓர் ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவர்களுக்கிடையே காதல் கனியத் தொடங்கிய நேரத்தில் கைலாஷ் (சிவசந்திரன்) ஊட்டிக்கு வருகிறான். அவன் ராதா என்னும் பெயரில் இருக்கும் மாதவியை மிரட்டுகிறான். அவளுக்கும் கைலாஷுக்கும் என்ன உறவு? பிரதாப்புக்கும் ராதாவுக்கும் மணம் நடந்ததா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.
இந்தப் படத்தின் தொடக்க காட்சியே மாதவியின் மண நாள் காட்சிதான். அவளுக்குக் காதலன் கைலாஷ் எழுதிய கடிதம் கிடைக்கிறது. தன்னை அவன் உயிருக்குயிராக காதலிப்பதாக அவள் நம்புகிறாள். அவனைக் கைவிட்டுவிட்டு வீட்டில் பார்த்த வரனை மணக்க அவள் மனம் இடம்கொடுக்கவில்லை. ஆகவே, அவள் வீட்டிலிருந்து வெளியேறுகிறாள். வந்தவளுக்கு அதிர்ச்சி. கைலாஷ் ஒரு மோசடிக்காரன் என்பது தெரியவருகிறது. வீட்டிற்குத் திரும்பினால் அவள் வீட்டைவிட்டு ஓடிய விவரம் அறிந்த வளர்ப்புத் தந்தை இறந்துவிடுகிறார். அவளுக்கு வேறு ஆதரவு இல்லை. தோழியைத் தேடி ஓடுகிறாள்.
இந்தப் படத்தைப் பார்த்தபோது, ஏன் எடுத்த எடுப்பில் இப்படி எல்லா சஸ்பென்ஸையும் திறந்துவிட்டுப் படத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஃப்ளாஷ் பேக் உத்தியை எல்லாம் பயன்படுத்திப் படத்தை வேறுமாதிரி கொண்டுபோயிருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் எல்லாமே நேரடியான காட்சிகளாகவே போயின. கைம்பெண் திருமணம், காதல் ஏமாற்றம், மோசடிக் காதல், காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இப்படிப் பல விஷயங்கள் இருந்தும் படம் உப்புச் சப்பில்லாமல் இருந்தது. அதிகப் பரிச்சயமில்லாத இரண்டு மெலோடிப் பாடல்கள் கேட்கும்படி இருந்தன. இந்தப் படத்தைப் பற்றி எல்லாம் யாராவது எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.