தமிழ்த் திரைப்படங்களில் வளரிளம் பருவக் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் காதல் அல்லது காமம் சார்ந்த
திரைக்கதைகளிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அழியாத கோலங்கள், வைகாசி பொறந்தாச்சு, துள்ளுவதோ இளமை போன்ற படங்களை
உதாரணமாகச் சொல்ல முடிகிறது. அல்லது விளிம்புநிலையில் வாழ நேர்ந்ததால்
வன்முறைக்காளாகி சமூகத்தின் குற்றச் செயல்களுடன் தொடர்புகொண்டவர்களாக
மாறிவிடுவார்கள். இதற்கு உதாரணமாக ரேணிகுண்டா போன்ற படத்தைச் சொல்லலாம். ஆனால்
இந்தப் பாதையில் பயணப்படாமல் விளிம்புநிலையில் வாழ நேர்ந்தாலும் சமூகம் வெறுக்கும்
குணங்களைத் தங்களுக்குள் புக அனுமதிக்காத வளரிளம் பருவத்தினரைத் தனது கோலிசோடாவில்
பாத்திரங்களாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய்மில்டன். இது கிட்டத்தட்ட மெரினா திரைப்பட களத்தின்
நீட்சியாக இருக்கிறது.
சேட்டு, புள்ளி, சித்தப்பா, குட்டி மணி
ஆகிய நால்வரும் கோயம்பேடு சந்தையில் காலங்கழிக்கும் விடலைப் பையன்கள். தங்களுக்கான
அடையாளம் தேவை என்று வரும்போது மெஸ் ஒன்றை நடத்துகிறார்கள். பெரிய மனிதர்களே
தடுமாறும் வியாபாரத்தை மிகச் சுலபமாக இவர்கள் மேற்கொள்கிறார்கள். வியாபாரத்தில் ஏற்படும் எந்தச் சிக்கலும்
காட்சிகளில் இல்லை. கோயம்பேடு சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
நாயுடு என்னும் பெரிய மனிதர் தொடக்கத்தில் பையன்களுக்கு உதவுகிறார். பின்னர்
இவர்களிடையே மோதல் ஏற்படுகிறது. இந்தப் பின்னணியில் ஆச்சி, யாமினி, ஏடிஎம்,
மந்திரவாதி, போன்ற
கதாபாத்திரங்களும் ஒன்றிணைய ஏற்படும் நெருக்கத்தையும் விலகலையும்
போராட்டத்தையும் சினிமாத்தனமான நெகிழ்ச்சியுடன் படமாக்கியுள்ளார் விஜய்மில்டன்.
தங்களைச் சுற்றி உள்ள பெரியவர்கள்
தீமையான செயல்களைப் புரிகிறார்கள். ஆனால் படத்தில் வரும் வளரிளம்பருவத்தினர்
அப்பழுக்கற்றவர்களாக உள்ளனர். உளவியல்ரீதியாக இதற்கான சாத்தியமுள்ளதா என்பது ஆராயப்பட வேண்டியதே. ஏடிஎம்மின் தாயும்
தந்தையும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்கிறார்கள் ஆனால் அவள் வாழ்க்கையின்
நெளிவுசுளிவுகளை உணர்ந்தவளாக இருக்கிறாள். அதற்கான நடைமுறைச் சாத்தியத்தியம் பற்றி திரைக்கதை எதுவும்
தெரிவிக்கவில்லை. அவள் வாழ்வைப் புரிந்தவள் என்பது மட்டுமே திரைக்கதைக்கு
தேவைப்படுகிறது. தொந்தரவுதரும் எந்த விஷயத்திற்குள்ளும் செல்லாமல் திரைக்கதைக்குத்
தேவையான பெரும் பாதையில் மட்டும் பயணப்பட்டே படம் முடிந்துவிடுகிறது. பெரும்பாலானோர் வழிமாறிப்போகும் சூழலில் நேர்வழியில்
நடக்கும் மனிதர்கள் வெகுசனத்தின் விருப்பத்திற்குரியவர்களாக மாறிவிடுகின்றனர்.
கோலிசோடாவை வெகுசனங்கள் ரசிக்கும் பல
காட்சிகள் எதார்த்தத்தில் சாத்தியமற்றவை; கறாரான கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ள
முடியாதவை; இன்னும் சொல்லப்போனால் ஆபத்தானவை. ஆனால் பார்வையாளர்களுக்கு அதில்
கவலையில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அதர்மத்திற்கு எதிரான வதம் அவசியமாகிறது.
அதிலும் அதைச் செய்ய சாத்தியமற்ற விடலைப்
பையன்கள் செய்யும்போது கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
மயில் குழுவினர் விடலைப் பையன்களை
எளிதில் துவம்சம் செய்துவிட முடியும் ஆனால்
பெண்களுக்கெதிராக அவர்கள் அத்துமீறும்போது அங்கே ரௌத்திரத்தை வெளிப்படுத்தும் விடலைப் பையன்கள்
ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்திசெய்துவிடுகிறார்கள். இதைத் தான் காலங்காலமாகக் கதாநாயகர்கள் செய்துவந்தார்கள். பாட்ஷா
திரைப்படத்தில் உள்ளே போ எனத் தனது தம்பிகளைப் பார்த்து ஆக்ரோஷமாகக் கூறிவிட்டு எதிரிகளைத் துவைத்தெடுக்கும் ஆட்டோ
மாணிக்கம் போல் இந்தப் பையன்கள் எதிரிகளைப் புரட்டி எடுக்கிறார்கள். மாணிக்கம் கடந்த காலத்தில் ஊரையே
கலங்கவைக்கும் பாட்ஷாவாக இருந்தவன். ஆனால் இந்தக் கோயம்பேடு பையன்களுக்கு
அப்படியான எந்தப் பின்புலமும் இல்லை. அவர்களது சூழல் அவர்களைப் போராடுபவர்களாக
மாற்றியுள்ளது என சப்பைக்கட்டு மட்டுமே கட்ட முடியும்.
தங்களால் எதார்த்தத்தில் செய்ய இயலாத
அத்தனை மிகையான விஷயங்களையும் செய்கிறார்கள் விடலைப் பையன்கள். காலில் கயிற்றைக் கட்டி காரை கதாநாயகன்
நிப்பாட்டுவது போன்ற
சிறுபிள்ளைத்
தனத்தைச் சகித்துக்கொள்ள முடியாதது போன்றே இந்தப் பையன்களின் பெரிய மனுஷத்தனத்தையும் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. பதினைந்து பதினாறு வயதில் புகைபிடிப்பது தவறென்று கொண்டால்
அந்த வயதில் சண்டையிடுவதும் தவறான செயலே அது நல்ல நோக்கத்திற்காக என்றாலும்கூட. வயதில் சிறியவர்களை அடித்துத் தம் பெருமையை
நிலைநாட்டிவிட முடியும் என நாயுடு கூறுவது
அபத்தமானது தான். ஆனால் அந்தச் சூழலிலும் பையன்கள் பொளந்துகட்டுவது ரசிகர்களை
உசுப்பேற்றிவிடுகிறது. அதனால் தான் அவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் இது
ஆரோக்கியமானதா?
உருவத்தை வைத்து செய்யப்படும்
கிண்டலுக்கு நிகரானது ஏடிஎம் பாத்திரம் கையாளப்பட்டுள்ள விதம். காதலுக்கு
முக்கியமானதாகக் கருதப்படும் உடலழகை மறுதலிப்பது போல் ஏடிஎம் கதாபாத்திரத்தை அமைத்துள்ளார்
இயக்குநர். ஆனால் பார்க்க அழகாக இருக்கும் புள்ளியையே ஆச்சியின் மகளான யாமினி விரும்புகிறாள். ஏடிஎம்முக்கு
இணை சித்தப்பா தான் ஏனெனில் அதுதான் எதார்த்தம். அந்த எதார்த்தத்தை நல்லுணர்வு என்னும்
பூச்சால் மிகையாக மறைக்கும்போது பாவனையான கதாபாத்திரமாக ஏடிஎம்
உருக்கொண்டுவிடுகிறது. வாழ்வைப் புரிந்துகொண்டவளாக ஏடிஎம் இருக்கும் அதே
வேளையில் நாயுடுவின் மனைவி கொடூரமானவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். அவர் ஆங்காரத்துடன் ஏடிஎம்மின் கூந்தலை அறுத்தெறிகிறார். ஒருபுறம் தீயவர்கள் மறு புறம்
நல்லவர்கள் என்னும் எளிய பிரிவினையின் அடிப்படையிலேயே கதாபாத்திரங்களும் அதன் குணாதிசயங்களும்
கட்டமைக்கப்பட்டுள்ளன. அடுத்து ஊருக்குத் திரும்ப வேண்டிய பெண் பேருந்து கிடைக்காத
சூழலில் எந்தவிதக் கேள்வியுமற்று கோயம்பேடு சந்தையில் உள்ள ஓரிடத்தில் தங்குகிறார்
என்பது அபத்தத்தின் உச்சம். அதில் துளியும் நம்பகத் தன்மை இல்லை. இவையெல்லாம் திரைக்கதையை சுவாரசியமாக்கப் பயன்பட்டுள்ள உத்திகள் ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ளுமளவுக்கான குறைந்தபட்ச நம்பகத்
தன்மை அவசியமில்லையா?
சக்திமான் போன்ற தொலைக்காட்சிப்
பாத்திரங்கள் சிறுவர்களிடம் எதிர்மறைத் தாக்கத்தையே ஏற்படுத்தின. இப்படத்தின் பல காட்சியமைப்புகள் அப்படியான தாக்கத்தை உருவாக்கக்கூடியவையே. இதற்குக்
கிடைக்கும் வரவேற்பு பலத்த அதிர்ச்சியை அளிக்கிறது. வன்முறை என்பது அரிவாளும் ரத்தமும்
மாத்திரமல்ல. மனத்தில்
போலித்தனமான ஆக்ரோஷத்தைக் கட்டமைப்பது வளரிளம்பருவத்தினரை திசைமாற்றிவிடும் ஆபத்து
கொண்டது.
குடும்பத்தைப் பிரிந்து சோகத்தில்
வாழும் மந்திரவாதி என்னும் கதாபாத்திரத்தில் சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே இமான்
அண்ணாச்சி. இவர் உதிர்க்கும் பல வசனங்களுக்கு தியேட்டர் குலுங்குகிறது. அதிலும்
சித்தப்பாவின் கனவில் பச்சை உடையில் ஏடிஎம்மை மந்திரவாதி அபகரிக்கும் காட்சியில்
அரங்கமே அதிர்கிறது. உண்மையில்
அந்தக் காட்சியில் உரக்கச் சிரிக்க அவசியமே தென்படவில்லை ஆனாலும் ரசிகர்கள்
குதித்துக் குதித்துச் சிரிக்கிறார்கள். கானா பாலாவின் பாடல் மட்டுமே சென்னையை
ஞாபகப்படுத்துகிறது காட்சிகளில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது கோயம்பேடு என்பதை
உணரவே இயலவில்லை. ஏனெனில் கோயம்பேடு சந்தையைக் களமாகக் கொண்ட படத்தில்
பெரும்பாலானோர் மதுரை பாஷை பேசுகின்றனர். அரிவாள் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை,
டாஸ்மாக் காட்சிகள் இல்லை என்பன போற்றுதலுக்குரியவை தான் ஆனால் இந்தக்
கோலிசோடாவின் அடையாளம் போலி எதார்த்தம் என்பது கசப்பான உண்மை.
இக்கட்டுரையின் எடிட் செய்யப்பட்ட பிரதி 2014 ஜனவரி 31 அன்று தி இந்துவில் வெளியானது. அதன் இணைப்பு: கோலிசோடாவின் அடையாளம் எது?