இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஜூன் 07, 2013

சூது கவ்வும்

அதர்ம தர்மம்



 தமிழ்த் திரைப்படங்கள்மீது நம்பிக்கை முற்றிலும் தூர்ந்து போகும்போது ஏதோவொரு படம் வெளியாகி நம்பிக்கையூட்டும். அந்த நிழலில் சில காலம் இளைப்பாற முடியும். சுப்ரமணியபுரம், ஆடுகளம் என்னும் அந்த வரிசையில் சூது கவ்வும் திரைப்படத்தை இருத்த முடிகிறது. நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய பகலவன், ஜாக்குவார் காரை ஓட்டிப்பார்க்கும் விருப்பத்தால் வேலையைப் பறிகொடுத்த சேகர், பெண்ணின் நயவஞ்சகத்திற்குப் பலியாகி வேலையிழந்த கேசவன், இல்லாத காதலியை இருப்பதாகப் பாவித்து இன்புறும் ஆள்கடத்தல்காரனான தாஸ் ஆகிய நால்வரும் சந்தித்துக்கொள்வதும் பின்னர் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் தாம் சூது கவ்வும். 

நன்கு வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் பல காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை வெறுமனே நகைச்சுவைப் படம் என்னும் கூண்டுக்குள் அடைக்க மனம் ஒப்பவில்லை. வன்முறைச் சம்பவங்களற்ற, பாலியல் சித்தரிப்புகளற்ற, ‘விளிம்புநிலை மனிதர்கள்’ இல்லாத புதிய முயற்சி இப்படம். சமகாலச் சமூக அபத்தங்களின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மற்ற படங்களில் இருந்து இது வித்தியாசப்படுகிறது. இந்தப் படத்தின் மைய உத்தி மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கமல் ஹாசன் கையாண்டதுதான் என்றாலும் எக்ஸ்பிரஸைச் சூது கவ்வும் அநாயாசமாக முந்துகிறது. இயக்குநரை மீறிக் கமலிடம் துறுத்திக்கொண்டிருந்த அறிவுஜீவித்தனம் படத்தைப் புத்திசாலித்தனமாக்காமல் பார்த்துக்கொண்டது. ஆனால் இயக்குநர் நலன் குமரசாமியிடம் வெளிப்பட்டுள்ள குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் இதை ஒரு மாறுபட்ட படமாக்குகிறது. 

பெரு நகரில் வாழும் சராசரி இளைஞர்களின் உலகம் அப்படியே பதிவாகியுள்ளது. தாகமெடுக்கும்போதெல்லாம் பீர் குடிக்கும் இளைஞர்கள் ஆக்ஸிஜனைவிட அதிகமாக நிகோடினைச் சுவாசிக்கின்றனர். இவர்களுக்கு அறச்சிக்கல்கள் எழுவதேயில்லை. அந்தந்த கணத்தில் வாழ்ந்துவருகிறார்கள். வேலை குறித்து படத்தில் வெளிப்படும் தியரியைச் சதாசர்வகாலமும் மரபில் மூழ்கிக் கிடக்கும் பொதுமனம் புரிந்துகொள்வது துர்லபம். பொதுச்சமூகம் உயர்வாகக் கருதும் பல விஷயங்கள் இப்படத்தில் எள்ளலுக்கு ஆளாகியுள்ளன. நடிகர்கள் மட்டுமன்றி நடந்தது என்னன்னா அருமைப்பிரகாசம், துரும்பிலும் இருப்பரில் வரும் நேர்மைக் குசும்பு என நலனின் குறும்படங்களில் இடம்பெற்ற சில விஷயங்கள் சூது கவ்வும் படத்தில் தலைகாட்டுகின்றன. சினிமா கிறுக்கைச் சித்தரித்த ஒரு படம் எடுக்கணும், சொதப்பலான படமெடுப்பைக் கூறும் உண்மையைச் சொன்னா, நெஞ்சுக்கு நிதி, என்கவுண்டர் பற்றிய தோட்டா விலை என்ன, ஒரு வீட்டில் பேய் இருந்துச்சாம் போன்ற பல குறும்படங்களில் தனித்தனியே கிடந்த பல உத்திகளை இயக்குநர் நலன் இப்படத்தில் ஒன்றுசேர்த்துள்ளார். நேர்த்தியான திரைக்கதை ரசிகர்களை எந்தவகையிலும் குழப்பக் கூடாது என்பதற்கு உதாரணம் இப்படம். திரைக்கதையில் சீரான தொடர்பு உள்ளது. படத்தின் பிற்பகுதியில் வரும் கோடம்பாக்கம் தாதாவுக்கு முற்பகுதியிலேயே குறிப்பு உண்டு. படத்தில் மிக இக்கட்டான சமயத்தில் விரைவாகக் காரைக் கடத்தும்போதும் அதை எங்கே விட்டுச்செல்வோம் என்பதை உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டே செல்கிறார்கள் தாஸ் அண்ட் கோ.


பல காட்சிகளில் தீவிரமான விஷயங்களை இயல்பாகத்  தெரிவித்துவிட்டுக் காட்சி நகர்ந்துவிடுகிறது. அருமைப் பிரகாசம் அம்மா தந்த பணம் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழும்போது அதைப் பிடிப்பதற்காக ஓர் எளியவரின் வேட்டியைப் பணம் கொடுத்துப் பெறும் காட்சி ஒட்டுமொத்தச் சமூகத்தின் இழிநிலையையும் மவுனமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது. பிரத்யேகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் படமாக்கப்படாத அந்தக் காட்சியை அலட்சியமான பார்வையாளன் எளிதில் தவறவிட்டுவிடுவான். ஆனால் அது ஆழமான சமூக விமர்சனம். இதைப் போன்ற சிறிய விஷயங்களில் வெளிப்பட்டிருக்கும் புரிதல்கள் படத்தின் மீது மரியாதைகொள்ளச் செய்கிறது. தாங்கள் கடத்த திட்டமிட்ட அருமைப் பிரகாசத்தை மற்றொரு குழுவினர் காரில் கடத்திச் செல்லும் காட்சியில், ‘அவங்க பின்னாடியே வர்றாங்க’ எனக் கூறப்படும்போது தாஸ், ‘நாம முன்னால போறோம்’ என்பார். ‘ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்’ எனக் கேட்கையில் ‘நிறைய வித்தியாசம்’ என்பார். அதே போல், தாஸ் நண்பர்களுடன் போலீஸ் வேனில் அமர்ந்திருக்கும் காட்சியில், “குற்றவாளிகளைத் தான் என்கவுண்டரில் போட முடியும் நிரபராதிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்பார். இத்தகையவை நகைச்சுவைப் படத்திற்கான வசனங்கள் அல்ல. வீரியமான சமூக விமர்சனத்தின் வெளிப்பாடு இவை. 

அருமைப் பிரகாசத்தின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின்னர் அதைப் பிரதி எடுக்க ஆட்டோவில் செல்லும் காட்சியும் குறிப்பிடத்தக்க ஒன்று. தங்களது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற மிதப்பின் கணத்தில் வீடியோ கேசட் தவறி விழுந்து சிதையும்போது பின்னணியில் ஒலிக்கும் டன்டணக்கா நாம் கொள்ளும் அபத்தமான நம்பிக்கைகளைக் கேலிசெய்கிறது. நேர்மையான அமைச்சரின் இடத்தைக் கள்ளத்தனத்தைப் பிசிறு தட்டாமல் செயல்படுத்தும் அமைச்சரின் மகனே பறித்துக்கொள்ளும்போது அறம் குறித்த வரையறைகள் காலாவதியாகின்றன. அறம் குறித்த நிலைப்பாடு ஆளாளாளுக்கு வேறுபடுவதை மிகவும் நுட்பமாக இத்திரைப்படம் காட்சிப்படுத்தியுள்ளது. நேர்மை என்பது புகழுக்கான உத்தி என்பதை நாசூக்காக உணர்த்தும் இப்படம் ஊழலையும் நேர்மையையும் ஒரே தட்டில் வைக்கிறது. 

நலனின் ஒரு படம் எடுக்கணும் குறும்படத்தில் வரும் ஒரு வசனம்: “முடிந்தவரை இம்ப்ரூவ் பண்ணிட்டு பெர்பெக்ஷனை நோக்கி போயிட்டேயிருக்கணும்” என்பது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை நலனுக்கு அது முற்றிலும் பொருந்திப்போகிறது. இந்தப் படம் பல காட்சிகளில் லாஜிக்கை மீறியுள்ளது. லாஜிக்கை மீறாமல் எந்தத் திரைக்கதையையும் உருவாக்க முடியாது. எதற்காக, எதை உணர்த்துவதற்காக லாஜிக்கை மீறுகிறோம் என்பதுதான் முக்கியமானது. பாக்யராஜின் வெற்றிப்படமான அந்த 7 நாட்களில் மிகப் பெரிய லாஜிக் மீறல் இருக்கும். ஆனால் திரைக்கதையின் பலத்தின் முன்னே அது பலவீனமாகியிருக்கும். காதலனுடன் சேர்த்துவைப்பதாகத் தெரிவித்துத் தான் ராஜேஷ் அம்பிகாவை மரண வாசலில் இருந்து அழைத்துவருவார். ஆனால் இறுதிக்காட்சியில் அம்பிகாவை ராஜேஷ் காதலனுடன் அனுப்பிவைக்க மாட்டார். அங்கு லாஜிக்கை மீறிய திரைக்கதை தான் வெற்றிபெற்றது. சூது கவ்வும் திரைப்படத்தைப் பொறுத்தவரை லாஜிக் மீறல் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் படத்தில் பெரும்பாலான வெளிப்படைக் காட்சிகள் உள்ளுறைக் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. இப்படி ஓர் அமெச்சூர்தனமான ஆள்கடத்தல்காரனா என்று கேள்வி எழுந்தால், இதற்கே இப்படி ஆத்திரப்படுகிறீர்களே உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அபத்தங்கள் என்னும் பதில் கேள்வி அங்கே தொக்கி நிற்கிறது. அத்தகைய கேள்விகளை உருவாக்குவதுதான் முக்கியம் எனும்போது லாஜிக்குகளை மீறுவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. 


பெண்ணே இல்லாத திரைக்கதையில் வணிகத்திற்காகவும் சுவாரசியத்திற்காகவும் ஷாலு என்னும் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கும் விதம் புத்திசாலித்தனமான உத்தி. சின்னச் சின்ன குறும்பு நடிவடிக்கைகளால் பார்வையாளர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார் ஷாலு. ஒரு கட்டத்தில் அதை ஓரங்கட்டிவிட்டு அப்படியே விட்டுவிடவுமில்லை இயக்குநர். இறுதியில் ஷாலு போன்ற ஒரு பெண்ணை தாஸ் கடத்துகிறார். அமைச்சரின் மகள் அவர். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது. ஆனால் பார்வையாளனிடம் படம் தொடர்கிறது. வழக்கமாகப் பணம் கொடுத்தால் தாஸ் ஆளை விட்டுவிடுவார். இப்போது அது நடக்குமா? ஏனெனில் தாஸின் ஷாலு அவள். ஒரு காலத்தில் தாஸுடன் ஷாலுவின் பிம்பம் இருந்தது. இப்போது அவரிடம் ஷாலுவே இருக்கிறார். ஆனால் பிம்பத்தில் தாஸைச் சந்தோஷப்படுத்திய ஷாலு நிஜத்தில் அவரைக் குஷிப்படுத்த முடியாது. ஏனெனில் அவருக்கு தாஸ் வெறும் கடத்தல்காரன். இந்தச் சிக்கல் தான் நமது வாழ்க்கை. இதை இப்படியும் உணர்த்தலாம் என்பதே மரபூறிய  மண்டையில் உறைக்காது. 

சினிமா, அரசியல், சோதிடம், செய்தி அலைவரிசை எனக் கிடைத்த எந்த இடத்தையும் இயக்குநர் விட்டுவைக்கவில்லை. சின்ன சின்ன இடங்களில் கூடத் தனது முத்திரை பதிக்கத் தவறவில்லை நலன். செய்தி அலைவரிசையின் அடிப்பகுதியில் வார்த்தைகளாக நகரும் ராஜ கம்பீரம் திடீர் மரணம், பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தமிழில் படமெடுக்க ஆர்வம் போன்ற செய்திகளே அதற்கு எடுத்துக்காட்டுகள். நேர்மையாக இருப்பது தவறல்ல ஆனால் அதற்கு ஓர் எல்லை உண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் அது உளவியல் சிக்கல் தான். ஞானோதயம் கதாபாத்திரம் லஞ்சம் வாங்க மறுப்பது சரி. ஆனால் மகனை மீட்க கட்சி தந்த நிதியைத் திரும்பக் கொண்டுபோய்க் கொடுப்பதைக் கட்சியாலேயே சகித்துக்கொள்ள முடியாது என்பதுதான் எதார்த்தம். நீதிமன்றக் காட்சிகளில் வழக்கமாக வாய்மையே வெல்லும் எனக் காந்தி படம் மாட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரே ஒரு திருவள்ளுவர் படம் மட்டும் தான். அவர் உலகப்பொதுமறை எழுதியவர், திருக்குறளில் எல்லாச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு என்பதால் அது தீவிர எள்ளல்.  

விறைப்புடன் வசனம் பேசிய டி. எஸ். பி. சௌத்ரி, அனல் பரப்பிய அலெக்ஸ் பாண்டியன், கழுத்து நரம்பு வெடிக்கப் பேசிய வால்டர் வெற்றிவேல் எனத் தமிழகத்து முன்னோடி போலீஸ் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் பிரம்மா தந்தது ஊமை அடி. தாஸைப் பொறுத்தவரை ஆள்கடத்தல் என்பது ஆத்மார்த்தம் தரும் வேலை. ஆள்கடத்தலை எந்தக் குறுக்குப்புத்தியும் இல்லாமல் மிகவும் நேர்மையாகச் செயல்படுத்துகிறார் தாஸ். ஆனால் ஊழல் மிகுந்த அரசியல்வாதி சட்டத்திற்குட்பட்ட ஆட்சி நடத்துகிறார். இந்த முரணில் வெளிப்படும் புத்தி சாதுர்யம் திரைக்கதையை மெருகேற்றியுள்ளது. படித்தவர்களின் திமிர், அறியாமை, பேராசை ஆகியவற்றைக் கேசவன் கதாபாத்திரம் மூலம் அம்பலப்படுத்துகிறார் இயக்குநர். அமைச்சர் மகன் அருமைப் பிரகாசத்தைக் கடத்தும் முடிவுக்கும், அது சொதப்புவதற்கும் மறைமுகக் காரணம் கேசவன் தான். திரைக்கதையில் கதாபாத்திரங்கள், வசனங்கள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நடிகர்கள் தங்களுக்கான கடமையைச் சரியாக நிறைவேற்றியுள்ளனர். விஜய் சேதுபதி தாஸ் கதாபாத்திரத்தை நூறு சதவிகிதம் உயிரோட்டமாக்கியுள்ளார். வங்கியில் மேலாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு பந்தாவாகத் திரும்பும் ஒரு காட்சி போதும், மாமா பின்ற மாமா எனச் சொல்லவைக்கிறார். நம்பிக்கையூட்டும் நடிகராக விஜய் சேதுபதி தென்படுகிறார்.



நம்பிக்கை கண்ணன் ஒரு காட்சியில் கூறுவார்: “நீங்க செய்யுறது தப்பு தான் ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்கிறது. அமைச்சர் செய்தது சரிதான் ஆனால் அதில் ஒரு துரோகம் உள்ளது” என்று. இந்த நகை முரணை அறக்கோட்பாடுகளால் எளிதில் விளக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் சூது கவ்வும் லாவகமாக விளக்குகிறது. அதுதான் இப்படத்தின் வெற்றி. திரையரங்கில் பார்வையாளர்களை ரசித்துச் சிரிக்கவைக்கும் பல வசனங்கள் கிரேஸி மோகன் தனமானவை அல்ல. கதாபாத்திரங்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் இயல்பான உரையாடல் பார்வையாளனுக்கு உற்சாகத்தைத் தருகிறது. அலுவலகங்களுக்கு மட்டும்தான் ஞாயிறு விடுமுறையா ஆள்கடத்தலுக்கும் விடுமுறைதான் என்பது தாஸுக்கு இயல்பானது ஆனால் பார்வையாளர்களுக்கு அது ரசனையான நகைச்சுவையாகிறது. இப்படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவற்றின் அதிகாரம் களைந்த நிலையிலே பயன்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர், காவல் துறை அதிகாரி போன்ற அனைவரும் மனிதர்களாக மட்டுமே வலம் வருகின்றனர். 

இசை, ஒளிப்பதிவு போன்றவை தேவைக்கேற்பப் பயன்பட்டுள்ளன. காசு, பணம், துட்டு, money பாடல் வண்ணமயமாக இருந்தாலும் படத்தில் வேகத்தடையே. தமிழ்த் திரையுலக மேதைகள் எல்லாம் வறட்டுத்தனமான படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் நேரத்தில் யாரோ ஓர் இளம் இயக்குநர் புத்துணர்ச்சியான படத்தைத் தரும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. முதல் படத்துடன் தனது முத்திரையை நிறுத்திக்கொள்ளாமல் இயக்குநர் நலன் தொடர்வது தமிழ்த் திரையுலகிற்கு நலம்பயக்கும்.

ஜூன் மாதக் காலச்சுவடு இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரை இது