துயர விலங்கு
இரண்டாம் உலகப் போரின்போது நடைபெற்ற துயரச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ரோமன் பொலான்ஸ்கி இயக்கிய த பியனிஸ்ட், மார்க் ஹெர்மென் இயக்கிய த பாய் இன் த ஸ்ட்ரைப்ட் பைஜாமாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களைத் திரைப்பட விழாக்கள், டிவிடிகள் ஆகியவற்றின் உதவியால் பார்க்க முடிகிறது. அந்தக் காலகட்டத்தின் துயரம் வற்றாத ஜீவநதியாக மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையான களங்களில் ஏதோ ஒரு வகையில் காட்சிகளாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதே 1939ஆம் ஆண்டில் தங்களது சொந்த ஊரான சாலூரில் பிழைக்க வழியற்ற சூழலில் வாழ்வாதாரம் தேடித் தேயிலைத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக வாழ விதிக்கப்பட்ட இந்தியத் தமிழர்களுக்கு நேர்ந்த துயரார்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பால் ஹாரிஸ் டேனியல் என்னும் ஆங்கிலேய மருத்துவர் 1969இல் எழுதிய நாவல் ரெட் டீ. இரா.முருகவேள் தமிழில் மொழிபெயர்த்துள்ள அந்த நாவலை விடியல் பதிப்பகம் எரியும் பனிக்காடு என்னும் பெயரில் 2007இல் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சம்பவங்களுடன் தனது கற்பனையைக் கலந்து பாலா உருவாக்கியுள்ள படம் பரதேசி.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா முரளிக்குத் தகுந்ததொரு வாய்ப்பை அளிக்க வேண்டியது தன் கடமை என்பதால் அவரை இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்ததாகப் பாலா கூறியுள்ளார். தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பாலா சொல்லிக்கொடுத்தது போலவே செய்துகாட்ட அதர்வா அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் காட்சிகள் உறுதிசெய்கின்றன. சித்தன், அகோரி போன்ற வழக்கமான பாலா படத்துக் கதாபாத்திரங்கள் போலவே ஒட்டுப்பொறுக்கி என்ற ராசா கோணலாக முகத்தைத் திருப்பிக்கொண்டு விரோதம் கலந்த விநோதப் பார்வையைத் தந்து தனியே திரிகிறான். தனித்துவிடப்பட்ட அவனது வாழ்வில் அவனுக்குத் துணையாக இருப்பவை துயரமும் துக்கமுமே. ஊரில் நடைபெறும் திருமணத்தின் கடின வேலைகள் அனைத்தையும் அவன் பிரயாசையுடன் செய்து முடிக்கிறான், அறிமுகக் கலை இயக்குநர் பாலசந்தரின் கலைரசம் ததும்பும் குடிசைகள் நிறைந்த சாலூரில் நூறு பேர் தான் இருப்பார்கள் ஆனால் காட்டையே அழித்துவிடுவது போல் ஆவேசமாக விறகு வெட்டுகிறான் ராசா. தேயிலைத் தோட்டத்தில் தப்பிக்க முயன்று மாட்டிக்கொண்டபோது அவனது கால் நரம்பு கோரத்துடன் துண்டிக்கப்படுகிறது. அந்தக் காட்சி மனத்தைப் பாதித்திருக்கவேண்டும் ஆனால் அப்போது ராசா வெளிப்படுத்தும் கோரமான கத்தல் காரணமாக அது காதுகளைக் காவுகொள்கிறது. வளர்ந்துவரும் நடிகரான அதர்வாவுக்குத் தனிப்பட்ட முறையில் ராசா கதாபாத்திரம் திருப்தி அளித்திருக்கலாம் ஆனால் பார்வையாளனைப் பொறுத்த அளவில் அது செயற்கைச் சித்தரிப்பே. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுபோல் தனது நடிப்பில் வெளிப்பட்ட ஜாலம் அனைத்தையும் பாலாவுக்குச் சமர்ப்பித்துவிட்டுச் சாதுவாக அதர்வா ஒதுங்கிக்கொள்வது அதனால்தானோ?
வாழ்வில் அனுபவபூர்வ துன்பங்களையும் துக்கங்களையும் திரைப்படத்தில் வெளிப்படுத்த மௌனத்திற்கு உறுதுணை புரிவது புரிதல்மிக்க இசை. முதலில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டபோது ஒருவகையான புலம்பெயர் சோகத்தின் துயரத்தை உள்வாங்கிக்கொள்ள முடிந்திருந்தது. ஆனால் திரைப்படத்தின் இங்கிதமற்ற பின்னணியிசைக் காட்சிகளில் அவ்வப்போது முகம்காட்டும் ஆன்மாவை அழித்தொழித்துவிடுகிறது. அளவுக்கு மீறிய ஓலமும் ஒப்பாரியும் பின்னணியில் வெளிப்படுவது அலுப்பூட்டுகிறது, சில காட்சிகளில் அருவருப்பூட்டுகிறது. மகேந்திரனின் உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் குழந்தைக்குப் பெரிய அம்மை என்று அஸ்வினி பதைபதைத்துச் சொல்லும்போது, பதற்றமின்றி மிகவும் சாதாரணமாகப் பெரிய அம்மையை ஒழித்துவிட்டதாக மார் தட்டும் அரசாங்க மருத்துவமனையில் தெரிவிக்கச் சொல்வார் விஜயன். அதில் வெளிப்படும் குரூரம் பார்வையாளனை உலுக்கக்கூடியதாக இருக்கும். காரணம் அது வெளிப்பட்ட விதம். ஆனால் பாலா எல்லாவற்றையும் மிகையாக்கத் துடிக்கிறார். அதனால் தான் இறுதிக்காட்சியில் ராசா தெருவோரப் பிச்சைக்காரன் போல் கூக்குரலிட்டுப் புலம்புகிறான். தான் வெளியேற முடியாமல் தவிக்கும் புதைகுழிக்குத் தன் மனைவி குழந்தையுடன் வருவது கண்ட அவனது அதிர்ச்சி பார்வையாளனைப் புரட்டிப்போட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி அமையாததற்குக் காரணம் காட்சியில் தென்படும் மிகையுணர்ச்சி.
திரைப்படம் காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து பாலா பெரும்பாலான காட்சிகளை மாண்டாஷாகவே நகர்த்துகிறார். பாடல்களைக்கூடப் பின்னணியாகத் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதை இங்கே நினைவுபடுத்தலாம். அதனால் தான் தேவைக்கு மட்டுமே வசனங்களையும் வசனகர்த்தாக்களையும் அவர் பயன்படுத்துகிறார். அது ஜெயமோகனாக இருந்தாலும் சரி, எஸ்.ராமகிருஷ்ணனாக இருந்தாலும் சரி, நாஞ்சில் நாடனாக இருந்தாலும் சரி. பாலாவுக்குத் தேவைப்படுவது இலக்கியப் பின்புலம் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். குசு, குண்டி, புடுக்கு என்பதைப் பாலாவே எழுதிவிடுவார், ஆனால் அதை நாஞ்சில் நாடன் எழுதும்போது அதற்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கும் எனப் பார்வையாளன் எண்ணிவிடுவான் என்பது மட்டுமே பாலாவின் கணக்கு.
ஒளிப்பதிவைப் பொறுத்தமட்டில் செழியனின் உழைப்பால் திரைக்காட்சிகள் அழகியலைச் சுமந்து திரிகின்றன. ஒவ்வொரு சட்டகத்திலும் ஒளிப்பதிவு இயக்குநரின் கடும் பிரயத்தனம் நீக்கமற நிறைந்திருக்கிறது. குறிப்பாக விஷ காய்ச்சல் காரணமாக டீ எஸ்டேட்டில் இறந்த கூலிகளின் சடலங்கள் மொத்தமாக எரிக்கப்படும் விஷுவல் பிரம்மாண்டமாக உள்ளது. திருவண்ணாமலை ஜோதி போல் கொளுந்துவிட்டு அழகாக எரிகின்றன சடலங்கள்! சடலங்கள் எரிவதைப் பிரத்யேக ரசனையுடன் படமாக்க இனியொருவர் பிறந்துதான் வர வேண்டும். பாலாவுக்கு வாழ்த்துப்பா இசைத்துக் கொண்டேயிருக்கலாம். பாலாவும் செழியனும் இணைந்து காட்சிகளில் மேற்கொண்டிருக்கும் நேர்த்தியும் ஒழுங்கும் சட்டகத்தின் அழகை அதிகரிக்கின்றன. ஆனால் அவையே படத்தைச் செயற்கையானதாக மாற்றுவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. பஞ்சாயத்தில் அமர்ந்திருப்பது, ஊரை விட்டு வெளியேறுவது, குளத்தில் மிருகம் போல் நீர் குடிப்பது போன்ற அனைத்துக் காட்சிகளிலும் கதாபாத்திரங்களை இருத்தியிருக்கும் பாங்கு படு நேர்த்தி என்றாலும் வெகு செயற்கை. சாலூர் மக்கள் எப்போதும் கூட்டம் கூட்டமாகவே காணப்படுகிறார்கள். பல காட்சிகளில் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் மேல்நிலைப்பள்ளியின் மாறுவேடப் போட்டிக்குள் நுழைந்தது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன.
அங்கம்மா வேடமேற்றுள்ள வேதிகாவின் உடல்மொழியில் நவீனப் பெண்ணின் அசைவுகள்தாம் வழிந்தோடுகின்றன. அந்தக் காலகட்டத்து பருவப் பெண் குறித்த நினைவு சிறிதளவும் எழுவதில்லை. கங்காணி தந்த வாக்குறுதிகளை நம்பி ராசா உள்படக் கிராமத்தினர் அனைவரும் அறியாமையின் காரணமாகக் கேள்விகளற்றுக் கைநாட்டு வைக்கும்போது அங்கம்மா பரிதவிக்கிறாள். அது எப்படிச் சாத்தியம்? அவளுக்கு மட்டும் அந்த அறிவு எங்கிருந்து வந்தது? காட்சிபூர்வ விளக்கம் தரப்படவே இல்லை. தங்களுடன் வந்த ஒருவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் சூழலில் அவனை அப்படியே விட்டுவிட்டுக் கிராமத்தினர் தொடர்ந்து செல்கின்றனரே ஏன் பாலா? அவர்கள் நெல்லுச்சோற்றுக்காகச் சடலத்தை மறைத்துவைத்த கொடூரர்கள் என்பதாலா?
தொழிலாளர்கள்மீது ஏவப்படும் மனித உரிமை மீறல்கள், வேலைக்குச் செல்லுமிடத்தில் பெண்கள்மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் ஆகியவை சதா சர்வகாலமும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. இத்தகைய கொடூரங்களை மனிதர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே கலைப் படைப்புகள் முயல்கின்றன. ஒரு படைப்பாளியின் நோக்கம் அதுவாகத் தான் இருக்கும். அத்தகைய படைப்பாளியாகத் தன்னை எண்ணிக்கொண்டிருக்கலாம் பாலா. ஆனால் பரதேசி படமாக்கப்பட்ட களத்தில் ஆங்கிலேயருக்குச் சரியான ஆடை வழங்காத தொழிலாளிமீது பாலா காட்டும் கோபம் அவர் ஒரு கங்காணி என்பதையே உறுதிசெய்கிறது. இரண்டு மணி நேரம் திரையில் ஓடும் திரைப்படத்தின் கலைத் தன்மைக்காக மனித உணர்வுகளை நசுக்குவதென்பது சரியானதாக ஒரு படைப்பாளிக்கு பட்டால் ஆங்கிலேயே தேயிலைத் தோட்ட மேலாளருக்கும் கங்காணிக்கும் சாலூர் கிராமத்தினர் வெறும் கூலிகள் தானே. அதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரி?
சிறந்த ஒளிப்பதிவாளராக அறியப்பட்டிருக்கும் பாலுமகேந்திராவிடம் இயக்கம் கற்றவரான பாலா தன்னைத் தனித்துவமிக்க இயக்குநராக அடையாளம் காட்டிக்கொள்வதில் பெருவிருப்பம் உடையவர். அதற்குத் தேவையான அனைத்துவகை உழைப்பையும் அவர் மேற்கொள்கிறார் என்பதை அவரது திரைப்படங்களின் மூலம் அறிய முடிகிறது. பாலாவின் குரு பாலுமகேந்திரா இயக்குநராகக் காரணமானவர் மகேந்திரன். அவர் தான் தமிழ் இயக்குநர்களில் நாவல்களை விழைவுடன் படமாக்கியவர். அவரைப் போல பாலாவும் நாவல்களைப் படமாக்குவதில் ஆர்வமாக உள்ளார். ஆனால் மகேந்திரனிடம் இருந்த பக்குவமும் புரிதலும் பாலாவிடம் இல்லை என்பதே உண்மை. புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’யை அப்படியே மகேந்திரன் உதிரிப்பூக்களாக மாற்றவில்லை. சுந்தரவடிவேலு கதாபாத்திரத்தை மட்டுமே எடுத்துக் கையாண்டிருப்பார் எனினும் ‘சிற்றன்னை’யைப் படத்தின் டைட்டிலில் குறிப்பிடுவார். ஆனால் டேனியலை நினைவுகூர்ந்த பரதேசி இரா.முருகவேளுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. பாலா ஆங்கிலேத்திலேயே நாவலைப் படித்திருக்கக்கூடும்.
பரிசுத்தம் கதாபாத்திரம் மூலம் பாலா தனது இந்துத்துவக் கருத்தியலைப் படத்தில் வலியப் புகுத்தியுள்ளார். கிறித்துவ மிஷினரிகள்மீது அநேக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டபோதும் கல்வியிலும் மருத்துவத்திலும் அவர்கள் ஆற்றிய பங்கு புறந்தள்ள முடியாதது என்பதே பெரும்பான்மையினரது கருத்து. தேயிலைத் தோட்ட மருத்துவர் பரிசுத்தம் கதாபாத்திரச் சித்தரிப்பில் பாலாவிடம் மேலிடுவது கிறித்தவர்கள்மீதான வெறுப்பு மாத்திரமே. தனது படத்தை உலகத் தரமானது என்று கூறத் தான் கூச்சப்படுவதாகப் பாலா ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரே கூசும் அளவுக்கு இப்படம் குறித்து உணர்ச்சிமேலிட்ட கருத்துகளை இணையங்களிலும் சமூக வலைதளங்களிலும் காண முடிகிறது. பரதேசி பாலாவுக்கும் அவரை ஆராதிப்பவர்களுக்கும் கலைப்படைப்பாக இருக்கலாம் ஆனால் பொதுப் பார்வையாளனுக்கு அது கலை அனுபவமாக மாறவில்லை.
காலச்சுவடு ஏப்ரல் 2013 இதழில் வெளியாகியுள்ள விமர்சனக் கட்டுரை இது.