இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, டிசம்பர் 07, 2012

அம்மாவின் கைப்பேசி


காக்கைக்குஞ்சு...


அம்மாவின் கைப்பேசி படத்தின் அறிவிப்பு வந்தபோது அதில் தலைப்புக்குக் கீழே சிறிய எழுத்தில் ஆங்கிலத்தில் A Mother’s Hand Phone எனத் துணைத் தலைப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. படத்தின் மீது ஒரு கவனத்தை உருவாக்கியது அந்த மொழியாக்கம்தான். பொதுவாக, டி.ராஜேந்தர், விஜயகாந்த், பவர் ஸ்டார் போன்றவர்களின் திரைப்படங்கள் எப்போதுமே முழு பொழுதுபோக்குக்கு உத்தரவாதமளிப்பவை. அந்த வகையான படமாக அம்மாவின் கைப்பேசி இருக்க முடியாது என்பதில் முழுமையான நம்பிக்கை இருந்தது. ஏனெனில் சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் போன்ற உலகத் தரமெனத் தான் நம்பிய படங்களைத் தாம் தங்கர் பச்சான் இதுவரை உருவாக்கியுள்ளார். அவரது நோக்கம் நல்ல திரைப்படம் என்பதால் அம்மாவின் கைப்பேசியைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. இத்திரைப்படம் வெளியாகும் முன்னர் தங்கர் தொலைக் காட்சிகளில் அளித்திந்திருந்த நேர்காணல்கள் அனைத்திலும் கிராமத்துத் தாயையும் நகரத்து மகனையும் ஒரு செல்போன் மட்டுமே இணைக்கும் என்று ஏகத்துக்குத் தெரிவித்திருந்த செண்டிமெண்ட் குறித்த பயம்  எழாமல் இல்லை. அந்த நேர்காணல்களில் அவரிடம் தென்பட்ட பண்பட்ட பாவம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தை 500 ஆண்டுகளுக்குப் பின்னர்கூட யாராவது ஒருவர் பார்த்து ரசிப்பார் என்று ரசனையோடும் பயபக்தியோடும் கலைச் செருக்கோடும் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டார். ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய அவ்வளவு ஞானச் செருக்கும் நம்பிக்கையும் தங்கர் பச்சானிடம் இருந்தது குறித்து ஆச்சரியம் எழுந்தது.

அம்மாவின் கைப்பேசியில் காட்சிகள் ஒவ்வொன்றாய் தோன்றித் தோன்றி மறைந்தன. இந்தத் திரைப்படம் குறித்து மனம் அதுவரை உருவாக்கி வைத்திருந்த பிம்பங்களை முற்றிலும் கலைத்துப்போடச் செய்துவிட்டார் இயக்குநர் தங்கர் பச்சான்.  


கிராமத்துக் குடும்பத்தில் இளைய பிள்ளை அண்ணாமலை. அவனுடைய அம்மா வழக்கமான கிராமத்துத் தாய். ஏழெட்டுப் பிள்ளை பெற்று ஒருவரால்கூட மகிழ்ச்சியை அனுபவித்தறியாதவள். அண்ணாமலை பொறுப்பில்லாமல் சுற்றினாலும் அந்தத் தாய்க்கு மகன் என்றால் உயிர். இடுப்பில் முடிந்துவைத்த பணத்தை அவன் திருடுவதைக் கூட ரசிப்பவள். சின்னச் சின்னத் திருட்டை வீட்டில் தொடர்ந்து மேற்கொள்பவன் அவன். அவன் செய்த ரசனை மிக்க திருட்டு மாமன் மகள் செல்வி. அண்ணாமலையின் சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் ‘இந்தக் காலத்து’ மனிதர்களைப் போல் சூதுவாது கொண்டவர்களாக இருந்தாலும் கதையின் நாயகன் நற்குணசீலனாகவே இருக்கிறான். செல்வி அவனுக்காகவே உருகினாலும் வேலை வெட்டி அற்ற அவனை அவள் வெறுப்பதுபோல் நடிக்கிறாள். செல்வியின் மீது அண்ணாமலை கொண்ட காதல் அவனை மற்றவர் வியக்கும் வண்ணம் உயர்த்துகிறது. 


அம்மாவின் கைப்பேசி எனத் தலைப்பிட்டோம், அதையே முன் நிறுத்தினோம் என்பது குறித்து அலட்டிக்கொள்ளவே இல்லை இயக்குநர். அம்மா மகன் பாசத்தை ஒழுங்காகச் சித்தரிக்க வேண்டுமென்ற பதற்றமின்றி  நிஜமான கலைஞன் போல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத் திரையில் ஒளி ஓவியமாகச் செதுக்கியதில் தங்கர் தனித்துத் தெரிகிறார். ஒரு காட்சியில் கூடத் தாய் மகன் பாசம் மனதைத் தொடும்படி அமையாததற்காகத் தங்கர் பச்சான்மீது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யாதவர் அவர். தனது திரைப்படத்தைக் காணப் போகும் ரசிகன் குறித்த கவனம் அவருக்கு இருக்கவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு ‘கலைப்படைப்பை’ உருவாக்குவதில் அவர் தன்னை இழந்துவிட்டார். அதனால் தான் படத்தின் கதைக்குத் தொடர்பு இல்லாவிட்டாலும் அங்கங்கே ஆடு, மாடு, கோழி, நாய் என அப்பாவி விலங்குகளை மனிதர்களோடு உலவவிட்டிருக்கிறார். பன்றியைக் கூட விட்டுவைக்கவில்லை. இத்தகைய காட்சிகளைக் காணும்போது தமிழன் வாழ்க்கை முறையைத் திரையில் காட்சியாக மாற்றுவதில் இயக்குநர் தங்கர் பச்சானிடம் தென்படும் அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது? நீளமான ஷாட்களைப் பயன்படுத்திப் பார்த்துள்ளார். மௌனமான ஷாட்களை முயன்றுள்ளார். எவையுமே அவருக்குக் கைகூடாமலே போய்விட்டது. சினிமா என்னும் கலை தங்கர் பச்சானுக்குக் கைகூடிவரவேயில்லை. 

படத்தின் பின்னணி இசையில் காட்சிக்குப் பொருத்தமாக ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளின் ஓசைகளை ஒலிக்கவிட்டிருப்பதில், குறிப்பாக செல்போன் ஒலிக்கும்போது பின்னணியில் பறவைகளின் கேவலை ஒலிக்கச் செய்திருப்பதை ரசித்துதான் உருவாக்கியிருப்பார். ஆனால் அதில் உணர்ச்சியே இல்லையே, என்னசெய்வது? காட்சிகளும் கதாபாத்திரங்களும் உயிர்ப்போடு இருக்க வேண்டியது உணர்வுபூர்வத் திரைப்படத்திற்கு அடிப்படை, அதை எதிர்பார்த்துத் தானே பார்வையாளன் வருவான். கருத்துகளைக் காது வலிக்கும்வரை சொல்வதை அவன் விரும்புவான் என உண்மையிலேயே எதிர்பார்க்கிறாரா தங்கர் பச்சான்?



அண்ணாமலைமீது திருட்டுப் பட்டம் கட்டும் சகோதரர்கள் செயல் கண்டு கோபம் கொண்ட தாய் வேறு வழியின்றிக் கையில் கிடைத்த துடைப்பத்தைக் கொண்டு அடித்து அவனை ஊரைவிட்டு வெளியேற்றுகிறாள். தான் உயிராய் நேசித்த ஊர், அம்மா, செல்வி என அனைத்தையும் விட்டுப் பிரிகிறான். அனைத்தும் பார்த்து பார்த்து அலுத்துப்போன சம்பவங்கள். அண்ணாமலையின் நினைவுவரும்போதெல்லாம் தான் செய்த இந்த அடாத செயலுக்காக வருத்தம் மேலிட அழுதுகொண்டேயிருக்கிறாள் அந்தத் தாய். ஆசை ஆசையாய்க் காதலிக்கு செல்போன் வாங்கித் தரும் காதலனைத் தானே இயக்குநர்கள் இதற்கு முன் திரையில் உலாவவிட்டார்கள். தங்கர் அங்குதான் மாற்றி யோசிக்கிறார்.  அண்ணாமலை  அம்மாவுக்கு வாங்கித் தருகிறான். இதே அண்ணாமலை கிராமத்தில் இருந்தபோது கிடைத்த சிறிய பணத்தைக் கொண்டு செல்விக்குப் பாவாடை தாவணியும் நவீன மார்க்கச்சையும் வாங்கித் தந்தவன்தான். ஏழாண்டுகளாக யாரையும் தொடர்புகொள்ளாமல் வைராக்கியமாக வாழ்ந்துவிடுகிறான் அண்ணாமலை. அதற்கான எந்தப் பின்புலமும் அழுத்தமாகக் கொடுக்கப்படவில்லை. திரைக்கதையில் நிகழும் எல்லா மாற்றங்களுமே திரையரங்கில் சிலைடுகளின் மாற்றம்போல் நிகழ்ந்துவிடுகின்றன. இவை திரைப்படத்தின் மொழி குறித்த அறியாமையை வெளிப்படுத்துகின்றன.

அண்ணாமலை தோல் பதனிடும் ஆலையில் வேலைக்குச் சேர்கிறான். அந்தத் தொழிலாளிகளின் துயரம் அவனது வாந்தியில் தெறிக்கிறது. ஒரேயொரு துண்டுக்காட்சியில் தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் துயரங்களைச் சொல்லாமல் சொல்லும் வித்தையை தங்கர் எங்கே கற்றாரோ? சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்த அந்த முதலாளி அவன் மீது பரிவுகொள்கிறார். அவனை கிரானைட் குவாரி நடத்தும் எதார்த்தத்தில் எங்கு தேடியும் காணக் கிடைக்காத, படுசுத்தமான முதலாளியிடம் அறிமுகப்படுத்திவைக்கிறார். அண்ணாமலையை அதிர்ஷ்ட தேவதை தன் சொந்தக் குழந்தையைப் போல் பாவிக்கிறாள். குவாரியில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அநீதி கண்டு பொங்குகிறான் அண்ணாமலை. விளைவு அண்ணாமலையை விபரீதத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. 



படத்தில் கோலோச்சுவது அந்த ப்ரசாத் கதாபாத்திரமே. அதில் தான் இயக்குநர் தனக்கான அதிகபட்ச மதிப் பெண்களை குவித்திருக்க வேண்டும். நயவஞ்சகம், வெகுளித்தனம், குற்ற உணர்ச்சி போன்ற மனித உணர்வுகள் மாறி மாறி எழும் கதாபாத்திரம் அது. ஓர் ஆக்டோபஸ் போல் அந்தக் கதாபாத்திரம் மற்ற அனைத்து விஷயங்களையும் வாரிச் சுருட்டி கக்கத்தில் திணித்துக்கொண்டு சென்றுவிடும் என்ற நம்பிக்கையில் தான் அது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திரைமொழி வசப்படாத காரணத்தால் அந்த எண்ணம் ஈடேறவில்லை என்பதுதான் குரூர எதார்த்தம், தங்கர் பச்சான் திரையில் காட்டும் சினிமா எதார்த்தமல்ல. 

உச்சக் காட்சியில் தன்னைக் கொல்ல வரும் வஞ்சகர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேச வேண்டுமே அண்ணாமலை. பேசவே இல்லை. ஓடி ஒளிகிறான். அவன் பலரைப் பந்தாடும் நாயகத்தன்மை மிக்கவன் அல்லவே, ரத்தமும் சதையுமான  சாதாரணமான மனிதன். குவாரியில் முதல் நாளில் பொங்கியெழுந்த அதே அண்ணாமலை உயிர் பிச்சை கேட்டு மன்றாடுகிறான். ஆனால் எதுவும் நடக்கவில்லை. துரோகம் அவனை அழிக்கிறது. வீட்டை இடிக்கும் சூழலிலும் தன் இளைய மகன் வந்துவிடுவான் என நம்பியே இருந்த தாயின் நம்பிக்கை கைகூடவே இல்லை. இதுதான் கலைப்படத்தின் கூறு என்பது இயக்குரின் எண்ணம்போல. 

ஏழாண்டுகளாக வராத காதலன் இனிமேலா வந்துவிடுவான். காத்திருந்து காத்திருந்து நம்பிக்கை இழந்த காதலி காதலன் இறந்துவிட்டான் என நம்பிவிடுகிறாள். காதலன் இறந்த பின்னர் ஒரு தமிழ்ப் பெண் என்னசெய்வாளோ அதையே அச்சுப் பிசகாமல் செய்கிறாள். கண்ணுக்கு லட்சணமான பையன் கிடைத்தவுடன் மண முடித்துக்கொள்கிறாள். காதலன் உயிருடன் இருப்பது அறிந்து அவனது கடிதத்தை வைத்துக்கொண்டு கணவன் உறங்கிய பின்னர் குளியலறைக்குச் சென்று அழுகிறாள். அவள் அழுதுவிட்டுக் கட்டிலில் படுக்கும்போது ஆணாதிக்க கரம் ஒன்று அவள் மீது விழுகிறது.  


அழிந்துவரும் கலையான தெருக்கூத்து இந்தப் படத்தில் தங்கரின் கையில் அகப்பட்டுக்கொண்டது. சந்நதம் கொண்ட சாமியாடிபோல் மனிதர் பிய்த்து உதறுகிறார். அவர் ஆடும் உற்சாக நடனம் தங்கரின் நடிப்பு வெறியை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. தெருக்கூத்துக் கலை மீது இயக்குநர் தங்கர் பச்சானுக்கு தீராத காதல் இருந்திருக்கிறது. அதை மறுக்க முடியாது. ஆனால் நமக்குப் பிரியமான ஒன்றை இப்படியா வதைப்பது? துணிச்சலுடன் தெருக்கூத்து உடையில் ஒரு பாடல் காட்சியை ரசிகர்களுக்குப் படைக்க முன்வந்ததற்கு காரணம் என்னவோ? தமிழ் பார்வையாளனின் ரசனை மட்டம் அதிக உயரத்தில்தான் உள்ளது. அவன் தனது கைக்கெட்டும் இடத்தில் இருக்கிறான் என நினைத்து ஏமாந்துவிட்டார் தங்கர் பச்சான்.  

திரைக்கதை எதையாவது மையப்படுத்துவது அவசியம். ஆனால் இப்படத்தில் இயக்குநர் கையாண்ட திரைக் கதையில் கருத்து என்பது மையமாகிப்போனது ஒரு மோசமான விபத்து. தமிழ்த் திரையுலகில் கருத்து சொல்லவும் தமிழனை சினிமா வழி நல்வழிப்படுத்தவும் ஆளே இல்லை என்று யாரோ தங்கரிடம் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் சொல்லியிருக்கக் கூடும். அதை அவர் நம்பியிருக்கலாம். 

அழகி, தங்கர் பச்சான் இயக்கிய முதல் திரைப்படம். அது தமிழின் உன்னதத் திரைப்படம் என்று சிலாகிக்கப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. தமிழ்த் திரைப்பட ரசனையில் வறட்சி ஏற்பட்டுவிட்டதோ எனத் தோன்றியது. இதுவரை தமிழில் எதார்த்தப் படங்களே வந்ததில்லை என்பது போன்று வாராது வந்த மாமணி போன்று அந்தத் திரைப்படத்தை ஒருசிலர் கொண்டாடித் தீர்த்தனர். தகுதிக்கு மீறித் தங்கரைப் பாராட்டி அவரது சினிமா படைப்பூக்கத்தைக் கிட்டத்தட்ட சிதைத்துவிட்டார்கள். கிடைத்த பாராட்டை உண்மையானது என்றே நம்பியிருக்கலாம் கிராமத்து மனிதரான தங்கர். அதனால்தான் எதார்த்தப் படம் என்னும் பெயரில் கற்பனையூரையும் அதன் மனிதர்களையும் சித்தரித்தே திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் அவர். அவர் சித்தரிப்பில் எள்ளளவும் எதார்த்தம் இல்லை என்னும் உண்மையை அவர் உணரவே இல்லை என்பதைத் தான் தொடர்ந்து வெளிவரும் அவரது திரைப்படங்கள் அனைத்தும் நிரூபிக்கின்றன. தான் படமாக்க நினைத்த திரைப்படத்தை இன்னும் தங்கர் பச்சான் உருவாக்கவில்லை என்றே எண்ண முடிகிறது. அதை அவர் உருவாக்க விரும்பினால் விருப்பு வெறுப்பற்று அவர் தனது திரைப்படங்களை மறுஆய்வு செய்து பார்க்க வேண்டும்.  அடுத்த முறையாவது ஓரளவு தரமான திரைப்படத்தைத் தர அவர் முயல்வது அவசியம். அழகி மிகச் சிறந்த திரைப்படமல்ல அது ஒரு சாதாரணத் திரைப்படம் என்னும் எளிய உண்மையை மனப்பூர்வமாக உணர்ந்துகொண்டால் தான் தங்கரால் அம்மாவின் கைப்பேசி போன்ற அபத்த சினிமாக்களைத் தவிர்க்க முடியும்.   

காலச்சுவடு டிசம்பர் இதழில் வெளிவந்த திரைப்பட விமர்சனம் இது.