டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
சென்னை தமிழிசைச் சங்கம் இருக்கும் ராஜா அண்ணாமலை மன்றத்தின் முன்னே ஆஜானுபாகுவாக நின்ற நிலையில் நிறுவப்பட்டிருக்கும் சிலை அண்ணாமலை செட்டியாருடையது. 1964 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று மைசூர் மகாராஜா திறந்துவைத்த சிலை இது. நிகழ்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சர் சி. பி. ராமசாமி அய்யர் தலைமை வகித்தார். தமிழிசைச் சங்கத்தை 1943இல் நிறுவி அதன் தலைவராகவும் இருந்த அண்ணாமலை செட்டியார் 1881 செப்டம்பர் 30 அன்று சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். இவர் உருவாக்கியதே அண்ணாமலை பல்கலைக்கழகம். சென்னை மாநகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரைக் கௌரவப்படுத்த இந்திய அஞ்சல் துறை தபால்தலை வெளியிட்டுள்ளது. அண்ணாமலைச் செட்டியார் பர்மா, பிரெஞ்சு, இந்தோ சீனா போன்ற நாடுகளில் இருந்த இந்தியர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து முயற்சி எடுத்தவர். அதன் காரணமாக 1935இல் இந்தியப் பிரதிநிதியாக லண்டனுக்கும் பாரிஸுக்கும் போய் வந்தார். 1921இல் இம்பீரியல் வங்கியின்(தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி) தொடக்கத்தில் அதன் கவர்னராக இருந்துள்ளார். இந்தியன் வங்கியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு இவருக்கு. 1948 ஜூன் 15இல் இவர் காலமானார்.
ராஜா சர் முத்தையா செட்டியார்
சென்னை ரிப்பன் கட்டடத்தில் இவருக்கு வெங்கலச்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அக்டோபர் 27, 1994 அன்று முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்துவைத்த சிலை இது. சிற்பி கோ.மோகன்தாஸ் உருவாக்கிய சிலை இது. இவர் 1905, ஆகஸ்ட் 5இல் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். 1922இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் குடும்ப வியாபார சம்பந்தமாக பர்மா சென்றார். மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 1929இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினரான இவர் 1933- 34இல் சென்னை மேயரானார். பூண்டி நீர்த்தேக்கம் அமைவதற்கு இவரும் உதவினார். இவருடைய முயற்சியால் சென்னை மாநகராட்சியின் சார்பில் குறைந்த சக்தி கொண்ட வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. தென்னிந்திய வர்த்தக சபையின் உறுப்பினராக இருந்தார். 1941இல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வி மீது ஆர்வம் என்பது இவரது பரம்பரை வழக்கம். மீனாட்சி கல்லூரியை உருவாக்குவதில் தந்தையாருக்கு துணை புரிந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் நீதிக்கட்சியின் தலைவர் என தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டபோதும் கல்வி மீது இவருக்கு ஆர்வம் தொடர்ந்திருந்துவந்தது. 1936இல் கல்வி, மக்கள்நலவாழ்வு, சுங்க துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது ஓராண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தின் கௌரவ வேந்தராகவும் இருந்தார். 1937 - 39 ஆம் ஆண்டுகளில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். பச்சையப்பா அறக்கட்டளையில் நிர்வாகக் குழுவில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். சென்னை ஐஐடியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார். 1941இல் சர் பட்டம் பெற்றார். 1948இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கௌரவ வேந்தரானார். தமிழ் மொழி, தமிழிசை, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலாச்சாரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1973இல் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் பட்டமளித்தது. 1979இல் தமிழக அரசிடமிருந்து தமிழிசைக் காவலர் என்னும் பட்டம் பெற்றிருந்தார். 1984 மே 12இல் இவர் காலமானார். இந்திய அரசாங்கம் 1987 டிசம்பர் 21இல் இவரது நினைவாக தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது.
பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர்
சென்னை ராஜாஜி சாலையில் மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் அருகே செங்கல்வராய நாயக்கர் சிலை உள்ளது. மார்பளவுக்கான இந்த வெங்கல சிலையை பிப்ரவரி 23, 2006 அன்று நீதியரசர் கே எம் நடராஜன் திறந்துவைத்தார். செங்கல்வராய நாயக்கர் 1886இல் ஆரம்பித்த டிரஸ்ட் பல கல்வி சேவைகளைப் புரிந்துவருகிறது. 1829இல் பிறந்த இவர் 1874இல் காலமானார். இவர் தன் சொத்துக்களை அறக்கட்டளையாக்கி வன்னிய மக்களின் கல்விக்காக என உயில் எழுதி வைத்துள்ளார். இந்த அறக்கட்டளை 1886இல் ஏற்படுத்தப்பட்டது.
சமநீதிகண்டசோழன்
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுநீதி சோழனின் பிரம்மாண்டமான சிலை நிறுவப்பட்டுள்ளது. 1996 இல் மெட்ராஸ் சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் உயர் நீதிமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது. இச்சிலையைத் திறந்துவைத்தவர் தமிழக ஆளுநர் பி.சி.அலெக்ஸாண்டர். உயர் நீதிமன்றத்தின் 125ஆவது ஆண்டுவிழாவை நினைவுகூர்வதற்காக இது நிறுவப்பட்டுள்ளது.
தன் மகனால் இறந்த பசுவின் துயரத்தைக் காணப் பொறாமல் அதே துயரம் தனக்கும் கிடைக்கச்செய்வதே சரியான நீதி என்றெண்ணி தனது மகனை தேர்க்காலில் மாட்டச்செய்து இறக்கச் செய்தான் மனுநீதிச் சோழன். இவனது சிலை நீதிமன்றத்தில் இருப்பது சரியான நீதியை உணர்த்தவே.