இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, மே 13, 2011

தலைசாய்க்கஇடமில்லை ...


பல வருடங்களுக்கு முன்பு எழுதிய சிறுகதை இது. வாசிக்கத் தொடங்கிய உடன் எழுதும் அரிப்பு ஏற்பட்டதால் எழுதினேன். இதெல்லாம் சிறுகதைன்னு ப்ளாக்ல போட்டுட்டான்... என்று யாராவது ஒருவர் திட்டக்கூடும் என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது ஆனாலும் அதையும் மீறி பதிவிட்டுள்ளேன்...

ஊரை விட்டுத்திரும்பும் நாள் வந்தது. ஏன்தான் வந்ததோ? அதற்குள் அப்படியென்ன அவசரம் என்றிருந்தது. எவ்வளவு நாள்கள் தங்கியிருந்தாலும் புறப்பட வேண்டிய நாள் நெருங்க நெருங்க அடிவயிற்றில் விளங்கவோ விளக்கவோ இயலாத கலக்கமோ பயமோ இரண்டும் கலந்ததை போன்ற உணர்வோ தோன்றும். வேதனை தரும். விரைந்து ஓடும் பொழுதுகள் தவழக்கூடாதா? ஏக்கங்கள் அநாவசியமானவை. ஆனாலும் எண்ணத்தை எப்படித் தடை செய்ய. 

அதிகாலை எழுந்து படுக்கையைச்சுருட்டும் போதே, வெளியில் வெளிச்சம் பரவிடினும் உள் மனதில் இருள் கவியத் தொடங்கியது. மிகப்பெரிய சந்தோஷத்தையும் ஒரு சாதாரணமான சிறிய வருத்தம் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. விடைபெறுதல் தரும் சோகங்களைச் சொல்லுக்கு இடம் மாற்ற முயற்சிக்கையில் மிஞ்சுவதும் சோகமே. எந்தச் சோகத்தையுமே முறையாக முழுமையாகப் பதிவு செய்கிறோமா? என மனத்தில் ஓர் எண்ணம் ஓடியது. உள்ளே உலவும் எண்ணங்களை எத்தனைப் பதமாக வெளியில் எடுக்க முயன்றாலும் கோணல் மாணலாகிவிடுகிறது. அவை ஓர்அழகென்று அப்படியே விட்டுவிடுதலே நிகழ்கிறது. 
எவ்வளவோ வேலைகளை முடிக்க நினைத்திருந்தும் எவையுமே முடிக்கப்படாததால் திருப்பதி மொட்டையாய் நின்றிருந்தது. சாயங்காலப் பொழுதுகளில் முற்றத்தில் அமர்ந்து இதமான காற்றை சுகமாக சுவாசித்தவாறு வாசிக்கவென கொண்டு வந்த புத்தகங்கள் வெளியில் எடுக்கப்படாத வேதனையால் புழுங்கின.
இம்முறை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென நினைத்திருந்த பள்ளிக்கூட காலத்து சிநேகிதன் பாலுவைக்கூட பார்க்கவில்லை. பள்ளி நாட்களில் இருவரும் ஒன்றாகத்தான் திரிவோம். எப்போதும் ஒன்றுபோல் திரிவதாலேயே அருகருகே அமர்ந்த எங்களைப் பிரித்துப் போட்ட ஆசிரியர் உண்டு. எட்டாங்கிளாஸ் காலத்திலேயே பெண்களுடன் நட்பை வளர்க்கத் தொடங்கினான். அதன் காரணமாக இப்போது அவனை மாமா என்றழைக்கும் குழந்தைகள் ஊரில் அதிகம்.
காலம் தான் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது! ஒரேவிதமான  சூழ்நிலைகளில் வளர்ந்த மனிதர்களையும் வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்து விட்டு எனக்கென்ன என்ற ரீதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. 
அரைசாண் வயிற்றை திருப்திப்படுத்த ஆரம்பித்த பெரும் போராட்டம் என்னை நகரத்து தார்ச்சாலைகளில் நிராதரவாய் விட்டுவிட்டது. கிராமத்து புழுதி பறக்கும் மாட்டுவண்டிசாலைக் கனவுகளை மனதில் தேக்கிக்கொண்டேன். புழுதிபடிந்த தெருக்களில் கிடைத்த நிம்மதியை பளிங்கு போன்ற சாலைகளில் தொலைத்துவிட்டேன். தத்தளித்தேன். கையில் கிடைத்த கட்டையைப் பற்றிக் கொண்டேன். தனம் தரும் கல்வியின் கொடையில் மாதாமாதம் சொற்ப வரும்படி கிட்டியது.
படிப்பைப் பாதியிலேயே துறந்து விட்டான் பாலு. பாவமோ? புண்ணியமோ? இருந்தால் பகவான் மட்டுமே அறிவார். பார்க்காத தொழிலில்லை அவனும். அவன் கையாண்ட வழிமுறைகளைக் கொண்டு 'ஒரே நேரத்தில் பல பெண்களைக் காதலிப்பது எப்படி? " எனுமொரு புத்தகம் எழுதியிருந்தாலே பெரும் பணக்காரன் ஆகியிருப்பான். எத்தனையோ பெண்களைக் காதலித்தும் அவர்களில் யாரையும் மணம் முடிக்காமல் வீட்டில் பார்த்த பெண்ணைத் திருமணம் முடித்துக்கொண்டான். புத்திசாலி. தற்போது சொந்தமாய் ஆட்டோ வாங்கி சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அவனே ராஜா, சேவகன் எல்லாம்.

ஓட்டிக்கு அடுத்தவன் காலைப்பிடித்து தொங்கவேண்டிய அவசியமில்லை. ' வந்து ஒரு மணி நேரம் ஆவுது... இன்னும் மெஷினத் தொடச்சு வேலய ஆரம்பிக்கல.... ஒன்னெல்லாம் வச்சு என்ன பண்ணித்தொலைய? " யார்மேலோ கொட்டப்பட வேண்டிய எரிச்சல் என் மீது கொட்டப்படும். எதிர்த்துக்கேட்க நா எழும். அடுத்துச் சுரக்கும் அமிலத்தை ஈடு செய்ய காரம் யார் தருவார்? எழுந்த நாக்கு ஒட்டிக்கொள்ளும்.
இத்தகைய தொந்தரவு அற்ற வாழ்வு. கொடுத்து வைத்தவன். நிம்மதியான சுவாசம். ஆனாலும் ஒழுங்காகப்படித்திருக்கலாம் என பார்ப்போரிடம் எல்லாம் புலமபுகிறானாம். இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
     
பேக்கில் கொண்டு போக வேண்டிய துணிமணிகள் மற்றும் சாமான்களை எடுத்து வைத்தேன். எப்படியும் ஏதாவது ஒன்று மறந்திருக்கும். பயணத்தின் போதோ மறந்து போனது தேவைப்படும் போதோ அது ஞாபகம் வரும். சுமை தயாராகிவிட்டது. எவ்வளவு காலம் இப்படிச் சுமைகளைச் சுமக்க வேண்டுமோ?
விடைபெற்றுக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினேன். எதிர்ப்பட்ட ஆட்டோவைக் கையைக்காட்டி நிறுத்த முயன்ற ஆசையை பொருளாதார நெருக்கடி இழுத்துப்பிடித்தது. பேருந்து நிலையம் நோக்கி சென்றேன். 
ரயிலில் போகலாமா? பஸ்ஸில் போகலாமா? குழப்பம் ஏற்பட்டது.    ' அங்க ஆக்ஸிடெண்ட்... இங்க ஆக்ஸிடெண்ட்ன்னு கேக்கும்போதெல்லாம் கொல பதறுது! சொன்னபடி கேட்டு பேசாம ட்ரெயின்லேயே போ. விதண்டாவாதம் பண்ணாத. "
அம்மாவின் குரல் செவிக்குள்ளே குறுகுறுக்க ரயிலிலேயே போகலாம் என முடிவு செய்தேன். 

இரயில் நிலையவரிசை. மிக நிதானமாக பயணச்சீட்டு வழங்கிக் கொண்டிருந்த ஊழியர் எனது பொறுமையை மல்லாக்கத் தள்ளிவிடுவாரோ எனப் பயந்தேன். நேரம் ஆகிக்கொண்டிருந்தது கூட்டமும் நடைமேடையில் அதிகமாகக் காணப்பட்டது. அதைப் பார்க்க எழுந்த எரிச்சல் ஊழியர் மேல் திரும்பியது. என் முறை வந்தது. சீட்டையும்  சில்லறையும் பெற்றுக்கொண்டு அவரை முறைத்து விட்டுத்திரும்பினேன்.
என்றைக்கும் இல்லாதவாறு இன்றைக்கு அதிக கூட்டம் தெரிந்தது. தன்மேல் விழுந்த வார்த்தைகளை யார்யார் மேலோ உதறியது வீசிக்கொண்டிருந்த காற்று. நான் மட்டுமே தனியே இருக்கிறேன் போல.எல்லோருடனும் யாராவது வழியனுப்ப வந்திருக்கின்றனர். என்னைத்தவிர எல்லோரும் ஏழாயிரம் எட்டாயிரம் சம்பாதிப்பார்கள் போலும். என்னுடனும் யாராவது வந்திருந்தால் இவர்களைப்போல மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்திருப்பேன். ஆறுதலான புத்தகத்தைப் பிரித்தேன். ரயில் வரும் முன்பு ஏற்பட்ட பரபரப்பு வாசித்தலை ஒத்திப்போட வைத்தது. 
முன்பதிவு செய்திருந்த புண்ணியவான்கள் முகங்களில் இருக்கை பற்றிய கவலைகளற்ற அமைதி படர்ந்திருந்தது. என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க ஆர்வம் பொங்கியது. கண்ணாடியிருந்தாலும் கவனிக்கப்படுவதை அறிந்தால் பாவனையை மாற்றிக்கொள்ளுமே முகம் எனவும் தோன்றியது. 
ரயில் வந்து நின்றது. உள்ளுக்குள் ஏறி கிடைத்த இடத்தில் அமர்ந்தேன்;. வண்டி கிளம்ப, எல்லோரும் கையசைத்த நிலையில் விலகிக்கொண்டிருந்தனர். நான் யாரைப்பார்த்து கையசைக்க? விரல்களை எல்லாம் இறுக்கி மடக்கிக்கொண்டேன். இங்கே இருக்கை கிடைத்ததைப் போல் எளிதாக இருக்கை கிடைக்கப்போவதில்லை விருதுநகரில். இந்த ரயிலிலேயே வழக்கத்தைவிட அதிகமான கூட்டம். மாறயிருக்கும் ரயில் பற்றிய யோசனை நேரத்தை அரிக்க ஆரம்பித்தது
வெளிச்சத்தை உண்ண ஆரம்பித்தது இருள். ஆங்காங்கே சிதறிய உணவுத்துகளாய் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன. ரயிலின் தடதடப்பு காதுகளில் மோதின. நான் கவனிப்பதைப் பொருட்படுத்தாமல் யாரையோ பற்றி கதையளந்து கொண்டிருந்த எதிர்வரிசைத் தம்பதிகளின் பேச்சில் மலையாள வாடை கசிந்து வந்தது.
மனிதர்களை அவர்கள் அறியாமல் கவனிப்பது தனி சுகம். யாரும் கவனிக்காத சூழலில் மனிதர்களின் செயல்பாடுகள் மிக இயல்பாக இருக்கும். மனதில் பழைய நினைவுகள் எழுந்தன. 
இரயில் கொடைரோட்டைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. அவ்வளவாகக் கூட்டமில்லை. மதுரையில் தன் மனைவி மற்றும் தம்பியோடு வண்டியேறிய மனிதர் அளவுக்கு மீறிய அசதியாய்க் காணப்பட்டார். உறக்கத்தின் கொடிய கரங்கள் அவரின் கண்களை அழுத்திப்பிடித்துக் கொண்டது. உட்கார்ந்த நிலையில் உறங்க முடியாமல் தவித்தவர் தரையில் நாளிதழை விரித்து ஏதோ ஒரு உலகம் சென்று விட்டார். ஆறு கண்களைத் தவிர அனைத்துக் கண்களும் திறந்திருக்க சோம்பல் கொண்டு மூடிக்கொண்டன. நான் உறங்காவிடினும் உறங்குவதைப் போன்ற பாவனை கொண்டேன். இதற்காகவே காத்திருந்ததைப் போன்ற நான்கு கண்களில் மிதமிஞ்சிய தாபம் தென்பட்டது.

தம்பியின் விரல்களிலிருந்து வெளிக்கிளம்பிய எறும்புக்கூட்டம், மனைவியின் மேனியெங்கும் சிதறிக் கிடக்கும் தேன்துளிகளை தேடித்தேடி மொய்த்தன. நான் விழுங்கிய எச்சிலில் காரணமற்ற கசப்புத்தன்மை தெரிந்தது. 
 
என்னெதிரே கச்சிதமான சித்திரத்தை இருக்க வைத்தது யாராய் இருக்கும்? அவளருகேயிருக்கும் ரயில் விட்ட புகை கொண்டு செய்த உருவமா? என்னமாய் இழைகிறாள் அவனிடம். தனித்தனியே ஒருமுறை கூட டீயோ காப்பியோ வாங்கவில்லை இருவரும.; அவள் கண்கள் தவறிப்போய்கூட பிசகவில்லை.
கருப்புச் சட்டையில் பட்ட வெண்புள்ளியை விட, வெள்ளைச்சட்டையில் பட்ட கரும்புள்ளி பளீரெனத் தானே தெரியும்!
                   
விருதுநகர்.
'சார் காபிய்ய்ய்....." ரப்பராய் நீண்ட குரல்;. கிட்டத்தட்ட லாமினேஷன் செய்த அளவு குறுக்கும் நெடுக்குமாய் செல்லோ டேப் பாய்ந்திருந்த ஐந்து ரூபாய் கைமாறி காஃபி வந்தது. வாங்கிய திரவத்தில் இனிப்பும், சூடும் இருந்தன.
'பயணிகளின் கனிவான கவனத்திற்கு...." சில நிமிடங்களுக்குப் பிறகு மாற வேண்டிய ரயில் நடைமேடைக்குள் வந்தது. எப்படியோ அடித்துப்பிடித்து வண்டிக்குள் ஏறிவிட்டேன். கம்பார்ட்மென்ட் முழுவதும் மனிதத் தலைகள். மக்கட்பெருங்கடல் பார்த்து மகிழும் நிலையில் மனதில்லை. கூட்டத்தைப் பார்க்கும் போது வெறுப்பு பொங்கியது. எல்லா இருக்கைகளும் அதிகப்படியான ஆட்களால் நிரம்பி வழிந்தது.
'சார்.... ப்ளீஸ்.... கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்"னு யாரிடமும் வேண்டுகோள் வைக்க இயலாத நிலை. எல்லோரையும் இரக்கத்துடன் வருடிய பார்வை பயனற்றுத் திரும்பியது. கொஞ்சம் வசதியான இடத்தில் நின்று கொண்டேன். 
மதுரையில் யாரேனும் இறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் கவனெமெல்லாம் இருக்கைகளில் பதிந்தது. ரயில் திருமங்கலத்தைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. ஓரத்தில் அமர்ந்திருந்தவரிடம் மதுரையில் யாராவது இறங்கப்போகிறார்களா என மெதுவாகக் கேட்டேன். அவர் பதில் எனக்கு ஆதரவாய் எனது காதில் மட்டுமே விழவேண்டும் என்ற  எண்ணம் பலித்தது. அப்பாடா! நின்ற சீர் நெடுமாறனாக நீண்ட நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை.
மதுரை.

இருக்கையில் அமர்ந்தேன். எதிர் இருக்கையின் கீழ்ப்புறம் பேக்குகளும், சூட்கேஸ்களும் புதுமணத் தம்பதிகளாய் இடைவெளியற்று நிறைந்திருந்தன. சாமான்களுக்கான பிரத்யேக மேலடுக்கு மனிதர்களைத் தாங்கிக் கொண்டிருந்தது. எனதிருக்கையின் அடியில் எனது பேக்கை வைத்தேன்.
எதிர் இருக்கைக் குடும்பத் தலைவர் நிம்மதியடைந்தார். நான் நிற்கும்போது எங்கே அவரைத் தள்ளி இருக்கச்சொல்லி வேண்டுகோள் வைத்து விடுவேனோ என்ற பயத்திலேயே பார்வையைக் கட்டாயமாக வேறு பக்கம் செலுத்தினார். இப்போது என்னைப் பார்த்தார். 
'எங்க சார் போகனும் நீங்க? "
     
'மெட்ராஸ் சார்."
'அவ்ளோ தூரம் எப்படி அன்ரிஸர்வ்ட்ல... ரிஸர்வ் பண்ணியிருக்கலாமே? "
'யோவ்! உனக்கிது அவசியமா... வேலயப் பாத்துட்டுப்போவியா... அதவுட்டுட்டு.... ஏன் ரிஸர்வ் பண்ணல? எதுக்குப் பண்ணல "ன்னு சொல்லாமல் 'எப்போதும் ரிஸர்வ் பண்ணிருவேன் இந்த தடவ கொஞ்சம் திடீர்னு கௌம்ப வேண்டியதாயிருச்சு. அதனாலதான். "
பொய். பச்சைப்பொய். ஒரேயொரு முறை தவிர எப்பொழுதுமே முன்பதிவு செய்து கொண்டதில்லை. அம்முறை ஏதோ ஆசையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டு செல்லலாமென நினைத்து முன்பதிவு செய்தேன். சாப்பிட்ட பின்பு படுக்கையில் படுத்தேன். புரண்டு புரண்டும் படுத்தேன். ஆனாலும் என்ன பிரயோஜனம்? கொட்டக்கொட்ட விடியும்வரை முழித்திருந்தது தான் மிச்சம். இரண்டு நாள் சம்பளத்தை காலிசெய்திருந்தது படுக்கைக்கான கட்டணம். அதை நினைக்கும் போதெல்லாம் வயிற்றெரிச்சல்தான்.
கால்கள் வலித்தன. ஒரேநிலையில் நீண்ட நேரம் வைத்திருந்த பாதிப்பு. இருக்கையின் அடியில் எனது பேக் இருந்ததால் உட்புறம் மடக்கி வைத்துக்கொள்ள முடியவில்லை. எதிரிலும் நீட்ட இயலாது. நடுவில் தரையில் ஒருவர் உறங்குகிறார். அவருக்கும் பேக்குக்கும் இடைப்பட்ட சொற்ப இடத்தில் எவ்வளவு நேரம் தான் கால்கள் தங்கும்? நீட்டவோ மடக்கவோ முடியாமல் குடைச்சல் பரவி தொந்தரவு தந்தது. சிறிது நேரம் இருக்கையில் தூக்கி வைத்து, முட்டியைச்சுற்றி கைகளால் பிணைத்து ஒடுங்கி உட்கார்;ந்தேன். இருக்குமிடத்தில் சம்மணம் நினைத்துப் பார்க்கவே இயலாது. 
நேரமாக ஆக உறக்கம் வேறு வந்து தொலைத்தது. எங்கேயாவது படுத்துறமாட்டமா... குறுக்கச்சாய்ச்சா சுகமாயிருக்குமே... என்றிருந்தது. கீழே படுத்திருந்தவர் திருச்சியில் இறங்க, அந்தயிடத்தில் படுக்க எத்தனித்தேன். விதி எதிரிலிருந்த குடும்பத் தலைவரின் குழந்தை ரூபத்தில் சதி செய்தது. இதுவரை இருக்கையின் உட்புறம் படுத்திருந்த குழந்தையை பெட்ஷீட் விரித்து கீழே படுக்க வைத்து விட்டார். இருந்த ஒரு கதவும் அடைக்கப்பட்டு விட்டது. இனி வழியேயில்லை. சென்னை வரை உறக்கத்துடன் போராடியே பயணிக்கவேண்டும்.
'சே... இன்னக்கி கௌம்பிய நேரமே சரியில்ல போல..."வென முணுமுணுத்தேன். நான் ஒருவன் மட்டுமே சரியான இடமின்றி உறங்க இயலாமல் அவஸ்தை அநுபவிக்கிறேன். எல்லோரும் கிடைத்த இடங்களில் நிம்மதியாய் உறங்குகின்றனர். இருந்தவாறே உறங்கும் ஒரு பிரகஸ்பதியின் குறட்டைச்சத்தம் ரயிலின் கூக்குரலையே போட்டிக்கு அழைக்கிறது. 
எப்படி இவர்களால் மட்டும் முடிகிறது? கொடுத்த வைத்த ஜென்மங்கள். வழக்கமாகப் படுக்கும் இடம் மாறினாலே தூக்கம் வராத துக்கமற்றவர்கள். தூங்கிக் கண்டார் சுகம் தூங்கிக் கண்டால்தானே புரியும். இப்போது கடவுள் தோன்றி, என்ன வேண்டுமோ கேள் என்றால் உறங்குவதற்கு ஓரிடம் மட்டும் போதுமென்றே சத்தியமாய் சொல்வேன்.
இருக்கக்கூட இடமில்லாத இந்த இக்கட்டான நேரத்தில் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வரும் தூக்கம் எத்தனை இரவுகளில் கண்ணாமூச்சு காட்டியிருக்கிறது. நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம். இதுதான் விதியின் விளையாட்டா?
விழுப்புரம் கடந்த பின்பு நெருக்கடி அதிகமாகியது. வேலைக்குச் செல்வோர் கூட்டம் வழிநெடுக ஏறினர். இரவின் இருள் மெதுமெதுவாக விலகி பகலின் வெளிச்சத்திற்கு இடம் விட ஆரம்பித்தது.
கூட்டம் பற்றிய எந்தக்கவலையுமின்றி அவரவர் பாட்டிற்கு எதையெதையோ பேசிக் கொண்டு வந்தனர். உரையாடல்கள் எவ்வித சுவாரசியமுமின்றி காதில் விழுந்தது.
இரவு முழுவதும் உறங்காத அசதியை உடம்பு உணர்ந்தது. கண்களில் தீராத எரிச்சல். எப்படியும் இன்று வேலைக்குப் போயாக வேண்டும். ஓய்வெடுக்க இயலாது. என்னடா பொழப்பு இது! எப்படா தாம்பரம் வரும் என்றாகிவிட்டது.  


வண்டி அனுராக் தியேட்டரைக் கடந்து வந்தது. அதன் முன்சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஆபாசச் சுவரொட்டி கண்ணில் பட்டது. இந்த எரிச்சல் மத்தியிலும் முதன்முதலில் பார்த்த ஆபாச படம் நினைவில் வந்தது. படம் பார்த்த அன்று உலகத்தில் யாருமே செய்யாத தவறைச் செய்தது போன்ற குற்றஉணர்வு இருந்தது. முதலில் இருந்த குற்றஉணர்வு தொடர்ந்த தவறுகளால் காணாமலே போய்விட்டது.
வண்டியின் வேகம் குறைந்தது.
'சிக்னலுக்காகப் போட்டிருக்கான்..." யாரோ கூறினார். சிக்னல் வேறு என்னைச் சீண்டியது. பேக்கை வெளியில் எடுத்தேன். வண்டி நகர்ந்து தாம்பரம் வந்தது. 
மக்களை மேனி தொட்டு விலக்கி இறங்கினேன். இறுதிவரை பயணச்சீட்டு பரிசோதகர் வரவேயில்லை. டிக்கெட் எடுத்தது அநாவசியமோவென நினைத்தது வெட்கம் கெட்ட மனது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். தலை முடியை அழுத்தமாக வாரிக்கொண்டேன். அழுக்கால் சீப்பின் நிறமே மாறிவிட்டது. அழுக்கெடுக்க வேண்டுமென நினைத்தவாறே நடக்க ஆரம்பித்தேன். 
இனிமேல் உயிர் போகும் அவசரம் என்றால் கூட இதைப்போன்ற அன்ரிஸர்வ்ட் கோச் பயணத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என நினைத்துக் கொண்டேன் எப்போதும் போல.      

வியாழன், மே 12, 2011

ஒரு சில சிலைகளும் தகவல்களும்


ஆர்.கே.சண்முகம் செட்டியார்

இராஜா அண்ணாமலை மன்றத்தில் நுழைகையில் எதிர்ப்படும் மார்பளவு சிலை ஆர் கே சண்முகத்தின் சிலை. இச்சிலையைத் திறந்துவைத்தவர் நாராயணசாமி. தமிழிசைச் சங்கத்தின் தலைவராக 1948முதல் 1953வரை இருந்துள்ளார் சண்முகம் செட்டியார். சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார். இவர் 1892 அக்டோபர் 10ஆம் நாள் பிறந்தார். பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். ஒருவர் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; மற்றவர் சட்ட அமைச்சர் அம்பேத்கர்.  


நிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பிவிட்டார். இவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.

இந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்க வேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தர வேண்டிய பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட் சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். கோயமுத்தூர் பகுதியைத் தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார். தாழையூத்துவிலும் சங்ககிரியிலும் சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைய பெருமுயற்சி மேற்கொண்டு, அதற்கான உரிமமும் வழங்கியுள்ளார். 1920ஆம் ஆண்டு நீலகிரி தொகுதியின் எம்.எல்.சி ஆனார். இவரது நேர்மையான, தூய வாழ்வையும் பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியும், எழுதியும் பாராட்டியுள்ளார். சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி சண்முகம் செட்டியாரது சிலை கோவை நகரில் நிறுவப்பட வேண்டுமென கோவை மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இவர் மே 5, 1953இல் காலமானார்.

சர் டி முத்துசாமி ஐயர்

சர் டி முத்துசாமி ஐயருக்கு சென்னை உயர் நீதிமன்ற கட்டட மாடியில் மூல விக்கிரகம் போல் சலவைக் கல்லில் சிலை நிறுவப்பட்டுள்ளது. 1862இல் உருவாக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் இவர். முத்துசாமி ஐயர் திருவாரூரைச் சார்ந்தவர். மிக ஏழைக் குடும்பத்தில் ஜனவரி 28, 1832இல் பிறந்த இவர் பல இன்னல்களிடையே போராடி படித்து படிப்படியாக அரசாங்க உத்தியோகத்தில் முன்னேறினார். 1878இல் ஹாலோவே என்னும் வெள்ளைக்கார நீதிபதி ஓய்வுபெற்றபோது அந்த இடத்திற்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு இவரை நியமித்தது. முத்துசாமி ஐயர் 17 ஆண்டுகள் உயர் நீதிபதியாக பணிபுரிந்தார். 



மாவட்ட முன்சீப் பதவியிலிருந்து வளர்ந்து வந்தவர் என்பதால் இவருக்கு எல்லா வகையான சட்டதிட்டங்களின் நுணுக்கங்களும் தெரிந்திருந்தது. நிலவரிச் சட்டங்கள், கொடுக்கல் வாங்கல் சட்டங்கள், கிரிமினல் வழக்குச் சட்டங்கள், சொத்து சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள் போன்ற எல்லாவற்றிலும் ஆழமான அறிவு உடையவர் இவர். எட்வர்டு அரசர் செய்த ஒரு குற்றத்திற்கு என்ன தண்டனை தருவது என்பதில் நிலவிய குழப்பத்தை இவர் தான் தீர்த்துவைத்தார். தவறு செய்தவர் மன்னர் என்பதால் அவரது படம் போட்டு வெளியிடப்படும் நாணயத்தில் கிரீடம் இல்லாத மன்னரின் தலை இடம்பெற வேண்டும் என்பது இவரது யோசனை. இதுதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அழியாப் புகழைப் பெற்ற இவர் 1895 ஜனவரி 25 அன்று மரணமடைந்தார். 

சர் வி பாஷ்யம் அய்யங்கார் 



சென்னை உயர் நீதிமன்றத்தினுள்ளே நீதிமன்றத்தைப் பார்த்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் சிலை தான் வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்காருடையது. 1927 இல் எம் எஸ் நாகப்பா வழங்கிய சிலை இது. பாஷ்யம் அய்யங்கார் வசதியான வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர். அந்தக் கால பிராமணர்களிடையே அரசாங்க உத்தியோகத்திற்கு மவுசு அதிகம். அதற்கேற்ப இவரும் சில ஆண்டுகள் சப்ரிஜிஸ்ட்ரராக பணி புரிந்தார். அவ்வேலையின் கெடுபிடிகள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் மனச்சோர்வு ஆகியவற்றின் காரணமாக அவ்வேலையிலிருந்து வெளியேறினார். சட்டம் படித்தார். மாகாணத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். 1872இல் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். அன்றைய சென்னை அட்வகேட் ஜெனரலான பாரிஸ்டர் ஓ. சல்லிவன் என்னும் வெள்ளையரிடம் ஜூனியராகச் சேர்ந்தார். பாஷ்யம் அய்யங்கார் சிவில் வழக்குகளுக்கு மட்டும்தான் வாதாடுவார். தென் இந்தியாவின் பிரமுகர்கள் பெரும்பாலானோர் இவரது கட்சிக்காரர்கள். அக்காலத்திலேயே இவரது வருமானம் பல ஆயிரம் ரூபாய்களாக இருந்தது. இவர் சட்ட மேதை ஆனால் சுவையான பேச்சாளர் அல்ல. மிகவும் நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக தாழ்ந்த குரலில் தான் பேசுவார். பாஷ்யம் அய்யங்காருக்கு சட்டம், வழக்கு, நீதிமன்றம் இவற்றைத் தவிர வாழ்க்கையில் வேறு எதிலுமே ஈடுபாடு கிடையாது. பிப்ரவரி 1897 முதல் மார்ச் 1898வரை, செப்டம்பர் 1899முதல் மார்ச் 1900வரை ஆகிய கால கட்டங்களில் இந்திய அட்வகேட் ஜெனரலாக இருந்துள்ளார். இப்பதவி வகித்த முதல் இந்தியர் இவர். 1901 முதல் 1904வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக சேவையாற்றினார். மயிலாப்பூரில் இவர் வாழ்ந்த வீடுதான் இன்றைய காமதேனு தியேட்டர். பாஷ்யம் அய்யங்கார் நவம்பர் 18, 1908 இல் காலமானார்.   

பகதூர் சுப்பிரமணிய அய்யர் 


சென்னைப் பல்கலைக் கழக செனட் கட்டடத்தின் முன்னே அமர்ந்தபடி இருக்கும் சிலை சர் எஸ் சுப்பிரமணிய அய்யருடையது. முதல் இந்தியத் துணைவேந்தராக இருந்ததால் 1935இல் இவரது சிலை செனட் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் இந்திய உயர் நீதிபதி முத்துசாமி ஐயர் 1895இல் மறைந்ததும் அப்பதவிக்கு மணி அய்யர் நியமிக்கப்பட்டார். இவர் மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 1, 1842இல் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருந்தும் முதலில் வக்கீலாகாமல் மதுரை மாவட்ட துணை ஆட்சியாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார் சில காலம். பின்னர் 1869இல் தனது வக்கீல் தொழிலைத் தொடங்கினார். 1875இல் வேல்ஸ் இளவரசர் மதுரை வந்தபோது மதுரை மக்கள் சார்பாக வரவேற்புரை நிகழ்த்தியுள்ளார் இவர். மதுரை நகராட்சி துணைத் தலைவராக 1882லிருந்து சென்னைக்கு குடிபெயரும் வரை இருந்துள்ளார். 1884இல் இவரது மனைவி லக்ஷ்மி அம்மாள் இறந்தபிறகு 1885இல் சென்னைக்கு வந்து குடியேறினார். குறுகிய காலத்திலேயே சென்னையின் பிரபல வக்கீலானார். 1888 இல் அரசாங்க வக்கீலாக நியமிக்கப்பட்டார். இப்பதவியை வகித்த முதல் இந்தியர் இவர்தான். மணி அய்யர் 1895இல் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். கண் பார்வையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதவிக்காலம் முடியும் முன்பே நீதிபதி பதவியிலிருந்து விலகிக்கொண்டார். ஓய்வு பெற்ற பிறகு மணி அய்யர் பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். 1885இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர் 1896இல் அதன் துணைவேந்தரானார். அச்சமயத்தில் பல கல்வித் திட்டங்களை நிறைவேற்றினார். அன்னிபெசண்ட் அம்மையார் நடத்திய ஹோம் ரூல் இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். 1893இல் திவான் பகதூர் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டார். நாட்டில் தலைவிரித்தாடிய அடக்குமுறைகளைக் கண்டித்து தனக்கு அரசாங்கம் அளித்த பட்டங்களை எல்லாம் உதறித் தள்ளினார். தியோஸோபிக்கல் சொஸைட்டியின் துணைத் தலைவராக 1907முதல் 1911வரை இருந்துள்ளார். 1908இல் சென்னைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமளித்தது இவருக்கு. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் கௌரவ பட்டம் இவருக்குத் தான் அளிக்கப்பட்டது. 1917இல் இந்திய விடுதலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸனுக்கு ஒரு கடிதம் எழுதினார். இக்கடிதம் இந்தியாவின் தேசிய சரித்திரத்தில் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. மணி அய்யர் டிசம்பர் 5, 1924இல் காலமானார்.