இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, நவம்பர் 05, 2010

நரகாசுரன் வீட்டுத் தீபாவளி

எல்லோருக்கும் வெண்பட்டு விரிப்பதில்லை வாழ்க்கை. சிலரைக் சுட்டெரிக்கும் வெயிலில் கட்டாந்தரையிலோ சுடுமணலிலோ அமரவைத்து வேடிக்கை பார்க்கும் அது. குரூரத்தை மனிதனைவிட கடவுளிடம் (அப்படி ஒருவன் இருக்கிறான் என்ற அனுமானத்தில் நம்பிக்கை இருப்பதாகக் கொண்டால்) தான் அதிகம் பார்க்க முடியும். தனக்குப் பிடிக்காதவர்களைக் கஷ்டப்படுத்துவதில் கடவுளிடம் பெண்கள்கூடத் தோற்றுப்போவார்கள். சற்று விரக்தியான மனநிலையில் மூழ்கியெழுந்து வெளிவரும் இந்தச் சொற்கள் யாரிடமும் ஆறுதலையோ தேறுதலையோ எதிர்பார்க்கவில்லை. வலியின் கொடுந்துயர் வலை பின்னும்போது அலறும் மனத்தின் ஓலம் எப்படிச் சந்தங்களைத் தன்னிடம் கொண்டதாக இருக்கும். அதன் போக்கில் அது வரும்.


இன்று தீபாவளி. ஊர் நரகாசுரனின் மரணத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் நரகாசுரன் வீட்டை மகிழ்ச்சிக் காற்று தீண்டுவதில்லை. அது மரணத்தைச் சந்தித்திருக்கும் வீடு. மரணம் தரும் வாதையில் தனது சுயத்தைச் சிதைத்துக்கொண்ட வீடு அது. வேதனையின் தூரிகைகள் அவ்வீட்டின் சுவர்களில் விநோதமான சித்திரங்களைத் தீட்டியுள்ளன. கூர்ந்து கவனித்தால் ஓவியங்கள்கூட துயரத்தின் சாயையைக் கொண்டிருக்கும். ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் தூரிகைகளிலிருந்து இன்னும் உலராத குருதி துளித்துளியாக வடிந்து வீட்டை நிறைத்துக்கொண்டிருக்கிறது. வீடெங்கும் ரத்தத்தின் இரும்பு வாடை வீசிக்கொண்டிருக்கிறது. வீட்டின் வெளியே கொடியவன் மறைந்த மகிழ்ச்சி கோலாகலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. வெளியே ஓசைகள் இன்பத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். வீட்டினுள்ளே துக்கத்தின் ஓலங்கள் உறைந்துபோயிருக்கும். அவ்வீட்டில் சாவின் சாயை படிந்து உயர ஒட்டியிருக்கும் ஒட்டடையில் எல்லாம் கோரம் தனது முகத்தைப் பதிந்துவைத்திருக்கிறது. அந்த வீடு எப்போதுமே அப்படித்தான். ஒவ்வோர் ஆண்டும் இதே முறையில் தான் நரகசுரன் இறந்துகொண்டேயிருக்கிறான் அங்கே.

மரணம் ஒரே தடவையோடு முடியாத விநோதமான வீட்டில் குடியிருப்பவர்கள் அவர்கள். அவர்களின் முகங்களை ஆழமாக ஊடுருவுபவர்கள் கண்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் வாதையின் சுவடுகளை உணர்ந்துகொள்ள இயலும். கண நேரம் கூட அங்கே மகிழ்ச்சி நீடிப்பதை இறைவன் விரும்புவதில்லை. அவனது கவனம் முழுக்க அவர்கள் மகிழ்ச்சியைப் பறிப்பதிலேயே குறியாக இருக்கும். அப்படி நினைப்பது ஒருவகையில் சுய பச்சாதாபம் தான். ஆனாலும் அப்படித்தான் தோன்றுகிறது. இறைவன் எல்லோரிடமும் அப்படித்தான் நடந்துகொள்கிறான். அவனது வேலையே வெறும் மவுனசாட்சியாக இருப்பதுதானே. அன்பு பிரியம் கருணை என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்பது மறந்தேபோய்விட்டதாம் அவனுக்கு. சந்தோஷ தேவதை தன்னை அலங்கரித்துக் கொண்டு அந்த வீட்டை நோக்கி வருவதைத் தூரத்தில் இருந்து பார்த்தாலே போதும் அவளை அங்கிருந்து நகர்த்துவதில் தனது குயுக்தியைப் பயன்படுத்த தொடங்கிவிடுவான் அவன். அவ்வீட்டு மனிதர்கள் மீது மந்திர சக்தியைக் கொண்ட சொற்களை ஏவிவிடுவான். அந்தச் சொற்கள் விநோதமான சக்தியைப் பெற்று விபரீதக் குணத்துடன் வெளிப்படும். மற்றவர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாத வீரியம் கொண்டவை அவை. கண்களைக் கட்டிக்கொண்டு கைபோன போக்கில் ஆயுதங்களை வீசுவதைப் போல் சொற்களை மாற்றி மாற்றி எறிவார்கள். தங்களது பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களை காயப்படுத்துவிட்டு மாயமாய் மறைந்துவிடும் அந்தச் சொற்கள். வெறும் சொற்கள் என அவற்றை எப்படிச் சொல்ல முடியும்? ஆனாலும் அவை வெறும் சொற்கள். ஆனால் சூத்ரதாரி அவன் தானே?