பதிவை வாசிக்கும் நண்பருக்கு வணக்கம். நீங்க மட்டும்தான் வாசிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். இது உங்களுக்கும் தெரியும். எப்பவோ எழுதிய விமர்சனமொன்றை இப்ப பதிவிட நேர்ந்ததன் அவசியம் பற்றி சொல்லிவிடுகிறேன். இதை எழுதிய சமயத்தில் நான் வலைப்பதிவு தொடங்கவில்லை; நான் எழுதியதை எல்லாம் பிரிசுரிக்க எனக்குத் தெரிந்த பத்திரிகைகளும் இல்லை. எழுதியதை எல்லாம் புத்தகம் போடும் சாமர்த்தியமோ சம்பாத்தியமோ என்னிடம் இல்லை. ஆனாலும் கையரிப்பு எழுதிவைத்தேன். இதைப் பதிவிட இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. ஏனெனில் இத்திரைப்படம் தேசிய விருதுகளை வென்றுள்ளது. இயக்குநர் இப்படத்திற்கான சிறந்த வசனகர்த்தா என்ற விருதையும் பெற்றுள்ளார். இது ஒரு முரண்நகைதான். சரி, பதிவிற்கு நகருங்கள் பொறுமையிருந்தால்.
ஊசியாய் இறங்கும் எள்ளல்கள்
குழந்தைகளுக்கான திரைப்படம் எனப் பரவலாகச் சொல்லப்பட்ட படமாயிருந்த போதும் சிறுவர்கள் நடித்த பெரியவர்களுக்கான படமே இது. குழந்தைகள் அந்தந்த கனங்களில் வாழ்பவர்கள். அத்தகு வாழ்வு ஒரு வரம். வளர வளர அந்த வரத்தை இழந்துவிகிறோம். கடந்துசென்ற நாட்களின் சுகமான நினைவுகளை அசைபோடுவதில் மன்னர்கள் பெரியவர்களே. பால்ய காலத்து நினைவுகள் ஒவ்வொருவரை ஒவ்வொருவிதமாகப் பாதிக்கிறது. கடந்துபோன கால்சட்டை காலத்திற்குள் மீண்டும் காலம் நம்மை இழுத்துச் சென்று இருத்திவிடாதா என்ற ஏக்கத்தோடேயே எஞ்சிய நாள்களைக் கழித்துவிடுகிறோம். நழுவிச் சென்ற தருணங்களையும் பாதைகளையும் பருவத்தில் வந்த காதல் நினைவுகளையும் நினைந்து நினைந்து உருகி உருகி மேலும் உருகிப் படமெடுப்பவர்களிடம் பயின்றுவந்தவர் பாண்டிராஜ் என்ற செய்தியையும் மீறிப் பசங்களைப் பார்த்தபோது அவர் தனது முன்னவர்களை மிக நுணுக்கமாகக் கடந்துவந்துள்ளதை உணர இயலுகிறது.
சொந்த வீடு ஒன்றே வாழ்வின் உயர்ந்த லட்சியம் அதைச் சம்பாதித்துத் தர வக்கற்றவன் தனக்கு வந்து வாய்த்தது தான் செய்த பாவத்தால்தான் என நம்பும் சரா‘சரி’யான இல்லத்தரசிகளின் தேந்தெடுத்த மாதிரி போதும் பொண்ணு, வந்ததைக் கொண்டு வாழ வேண்டும் வசதியை நோக்கிய பயணத்தில் வாழ்வைத் தவறவிடுதல் சரியல்ல என வாழும் எதார்த்தவாதியும் தான் அணியாமல் மற்றவருக்கு மட்டும் முகமூடி விற்பவருமான வெள்ளைச்சாமி, இவர்களுக்குப் பிறந்து ஐஏஎஸ் ஆவது என்ற கனவில் வலம்வரும் சிறுவன் அன்புக்கரசு ஐஏஎஸ், இவனது தங்கை தெய்வக் கனி, செல்லக்குட்டி கௌதம் (புஜ்ஜிமா) இந்தக் குடும்பத்தோடு வந்து தங்கி இன்ஸ்சூரன்ஸ் ஏஜண்ட்டாகப் பணிபுரியும் வெள்ளைச்சாமியின் சகோதரன் மீனாட்சி சுந்தரம் இத்தனை பேரை உள்ளடக்கிய குடும்பம் விராச்சிமலையில் புதிய வீடு ஒன்றிற்குக் குடிவருகிறது.
எதிர்வீட்டில் முத்தடக்கி அவரது கணவர் கணக்கு வாத்தியார் சொக்கலிங்கம் இவர்களது மகன் சிறுவன் ஜீவானந்தம் அவனது அக்கா பால்வாடி டீச்சர் சோபிக்கண்ணு ஆகியோர் வசித்துவருகின்றனர். வாத்தியார் பணியாற்றும் பள்ளியில் ஜீவாவோடு எப்போதும் ஒட்டிக்கொண்டு திரியும் குழந்தை வேல் (பக்கடா), (குட்டி) மணி இவர்கள் வகுப்பிலேயே படிக்கும் ஜீவாவின் அத்தை மகள் மனோன்மணி போன்றோர்தான் முக்கியக் கதைமாந்தர்கள்.
ஜீவாவின் பள்ளியில் புதிதாக வந்து சேர்ந்திருக்கும் அன்புக்கும் ஜீவாவுக்கும் பள்ளியில் ஏற்படும் உரசல் அதன் விளைவான மோதல், செல்லும் பாதையில் சந்தித்துக்கொள்ளும் மீனாட்சி, சோபிக்கிடையே ஏற்படும் பருவத்துப் பார்வை உரசல் விளைவிக்கும் காதல் ஆகியவை காரணமாகக் கதாபாத்திரங்களுக்கிடையே நிகழும் மாற்றங்களை ஒரு கல்வி ஆண்டில் நடக்கும் சம்பவங்களால் தொடுத்துத் திரைக்கதையாக்கியுள்ளார் இயக்குநர்.
ஜீவா குழுவினரின் அட்டகாசம் தாங்காமல் அவர்களைக் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் பெரியவர்கள் சிலர் முறையிடுவதில் தொடங்குகிறது படம். இக்காட்சி சற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். ஆனால் குறும்புச் சம்பவங்கள் இயல்பானவையே. அன்பு அறிமுகமாகும் அந்தப் பாடல் காட்சி வழக்கமாக இளம் கதாநாயகர்கள் அறிமுகமாகையில் அவர்களது கதாநாயக அந்தஸ்தை உயர்த்துவதற்காக அவர்களை ஆஹா ஓஹோ என வர்ணித்து அமைக்கப்படுவது போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒளிந்துள்ள நையாண்டி நைச்சியமாக உள்ளது. வகுப்பில் லீடராக அன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் இடம்பெறும் பாடல் காட்சியிலும் இப்படிப்பட்ட நையாண்டி மூலம் நமக்குத் தொடர்பில்லாத அம்சங்களைக் கையாண்டு படமாக்கப்பட்டிருந்த சில பழைய பாடல் காட்சிகள் எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றன. இத்தகு எள்ளல்கள் படம் முழுக்கவே அறையில் சூழும் சாம்பிராணிப் புகையாக ஒன்றறக் கலந்துள்ளது. உதாரணமாகப் பள்ளிக்கு முதன்முதலில் வரும் அன்புவிடம் அவனது பெயரைக் கேட்க அவன், “அன்புக்கரசு ஐஏஎஸ்” என்கிறான் உடனிருக்கும் குழந்தை வேல், “அன்புக்கரசுங்குறது உன்னோட பேரு ஐஏஎஸ்ஸுங்கிறது நீ வாங்குன பட்டமா... பட்டமா... பட்டமா...” எனப் பல திசைகளில் திரும்பிப் பார்த்துக் கேட்கிறான். மற்றோரிடத்தில் தான் லீடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தன்னை அனைவரும் ‘கேப்டன் கேப்டன்’ என அழைக்க வேண்டும் என்கிறான் ஜீவா. தன்னை மறந்து சிரிக்க முடிகிறது இத்தகு காட்சிகளில்.
தமிழ்த் திரைப்படப் பெரியவர்களிடமும் திரைப்படங்களிலும் காணப்படும் குழந்தைத்தனங்களைச் சிறுவர்களைக்கொண்டே அம்பலப்படுத்தியிருக்கும் விதம் புதிதாக இருக்கிறது. இத்தகைய சுய எள்ளல்கள் ஆரோக்கியமான விஷயமே.
குடும்பம், சமூகம், அரசியல் சார்ந்து மேலோட்டமாகப் பல கேள்விகளைத் தொட்டுச் சென்றுள்ளார் இயக்குநர். ஆங்கில வழிப் பள்ளிகளின் சுரண்டலிலிருந்து தப்பிப்பதற்காகவே அன்புவை அரசுப்பள்ளிக்கு மாற்றுகிறார் வெள்ளைச்சாமி. வசதி வாய்ப்புகள் இருந்த போதும் தனது மகனைத் தன் பள்ளியிலேயே படிக்கவைத்து வருகிறார் சொக்கலிங்கம். பணத்திற்காகச் சுயநலக் கும்பலிடம் தங்களை ஒப்புவிக்கும் கூட்டத்தினரில் ஒருவனாகத்தான் குழந்தை வேல் காட்சியளிக்கிறான். ஜீவாவிடம் அவன் சேர்வதற்கு அவனது வறுமைச் சூழல்தான் காரணமாகிறது. தின்பண்டங்கள் வாங்கக்கூட வசதியற்ற, கிழிந்த கால்சட்டைகளோடு உலவும்படியான பள்ளிப்பருவம்தான் அவனுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதைக்கூட அவன் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறான். தனது சூழ்நிலையை நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறான். அவனது சூழ்நிலையில் அவன் படிப்பில் உயர்ந்து நின்றிருக்க வேண்டும். ஆனால் படிப்பில் அவன் ஜொலிக்கவில்லை. மாணவர்கள் அவனைப் பக்கடா என அழைப்பது ரசிக்கும்படியாகவே உள்ளது; ஆசிரியரும் அப்படி அழைப்பது உறுத்தலாக இருக்கிறது.
பெற்றோர்களின் நிரந்தர சண்டை காரணமாகக் குடும்பத்தில் அமைதியற்ற சூழல் இருந்தபோதும் படிப்பில் கெட்டிக்காரனாகவே இருக்கிறான் அன்பு. அமைதியான சூழல் அமையப்பெற்ற ஜீவா கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளான். பெண்ணுன்னா அடிமையா எனச் சரிக்குச் சரி கேட்கும் போதும் பொண்ணுவின் வாழ்வில் நிம்மதிக்குலைவு நிறைந்து வழிகிறது. எந்தக் கேள்விகளுமேயற்ற முத்தடக்கி எப்போதும் கலகலவெனச் சிரித்தபடியே இருக்கிறாள்.
சைக்கிள் ஸ்லோ ரேஸில் கலந்துகொள்ள அன்புவிடம் சைக்கிள் இல்லை. மனம்வாடி தனியாகச் சென்று அழுகையில் குடும்பம் அவனைத் தேற்றுகிறது. பின்னணியில் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் ஒலிக்கிறது. குடும்பத்தினர் தந்த உற்சாகத்தால் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறுகிறான் அன்பு. தனது குடும்பத்தினர் தன்னை உற்சாகப்படுத்தாததாலேயே தான் வெற்றிபெற இயலவில்லை என்கிறான் ஜீவா.
இக்காட்சிகள் மூலம் தான் சொல்ல விரும்புவதைப் பார்வையாளனுக்கு உணர்த்திவிட முயல்கிறார் இயக்குநர். ஒரு படத்திலேயே அத்தனை விஷயங்களையும் பேச ஆசைப்பட்டவராய் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வசனங்கள் வழியே தனது குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சமீப காலமாக அரிதாரம் பூசாத அசல் தமிழ் முகங்கள் திரையில் மலர்வது அதிகரித்துள்ளது. இதிலும் பக்கத்துவீட்டு மனிதர்கள் போன்றவர்களே அதிகம். மீனாட்சி, சோபி காதல் காட்சிகள் சில்லென்ற மண்பானைத் தண்ணீர்போல் புத்தம் புதுசாகக் குளிர்ச்சியாக மலர்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. வித விதமான செல் போன் ரிங் டோன்கள் பொருத்தமாகக் கையாளப்பட்டிருப்பது உற்சாகம் தருவதாய் அமைந்துள்ளது. படத்தின் முற்பகுதி நீளமாக அமைக்கப்பட்டிருப்பதால் சற்று அலுப்பு ஏற்படுகிறது. ஆசிரியர் தினமோ குழந்தைகள் தினமோ குடியரசு தினமோ சுதந்திர தினமோ நினைவுகூரப்படாத போதும் ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவிய காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 நினைவுகூரப்பட்டுள்ளது படத்தில். குழந்தைகள் உலகில் பழிவாங்க எடுக்கப்படும் ஆயுதங்களாக் கருநாக்கு, காசுவெட்டிப்போடுதல், தேன் போன்றவை பயன்பட்டிருப்பது அழகு. ஒற்றைக் கால் செருப்பைத் தவறவிட்டு அதை எடுக்கப்போகும் போது அந்தத் திருப்பத்தில் பேருந்து ‘விர்’ரென விரையும் ஷாட், புஜ்ஜிமா குத்துப் பாட்டை வரி மாறாமல் பாடுவது, பேனாவின் திருகைக் கழற்றி மை கடன் வாங்கும் ஷாட் போன்ற அனுபவம் தொடர்பான சம்பவக் காட்சிகளில் பலம் பெற்றிருக்கும் இயக்குநர் பிரச்சினைகளின் தீர்வுகளை நோக்கி நகர்கையில் தடுமாறியுள்ளார். பாராட்டுகள் குழந்தைகளை ஊக்குவிக்கும் என்பது உண்மைதான் ஆனால் பிற்பகுதியில் பாஸிடிவ் பாயிண்ட்களின் அதிகப்படியான ஆதிக்கம் காரணமாகத் தான் தப்பிக்க முயன்ற சினிமாத்தனத்திற்குள் தானும் தள்ளப்பட்டிருக்கிறார் பாண்டிராஜ். மருத்துவமனைக் காட்சியில் அன்புவை நினைவுக்குக் கொண்டுவர அனைவரும் கைதட்டி ஆரவாரமிடுகையில் அந்த மருத்துவர் குதிரை ரேஸில் கத்துவதுபோல கமான் கமான் என்பது அபத்தம். அக்காட்சியே படத்தின் திருஷ்டிப் பொட்டான காட்சிதான். சிறுசிறு குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இப்படியொரு படத்தை முதல் படமாக எடுத்த இயக்குநரும் வாய்ப்பளித்த தயாரிப்பாளரும் தமிழ்த் திரைப்படப் பாதையில் சிறு திருப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர் என்பதில் மிகையில்லை.