தேசத்துரோகி என்னும் சிறுகதைத் தொகுப்பு, கொரில்லா, ம் போன்ற நாவல்களைத் தொடர்ந்து
ஷோபா சக்தி எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு வேலைக்காரிகளின் புத்தகம். இலங்கையின்
அரசியல் சூழலைத் தனது எழுத்துக்கள் மூலம் முற்றிலும் புதிதான கோணத்தில் அணுகுகிறார்.
வெகுஜன ஊடகங்களால் அறியப்பட்ட இலங்கையின் சூழல் மெல்ல மெல்ல மறைந்து இவர்
எழுத்துகளால் உருவான இலங்கையின் சூழலை மனம் உணரும்போது ஒருவித அதிர்ச்சி பரவுகிறது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என எல்லா வகையான மனிதர்கள் மேலும் மனித
நேயமற்றுப் பாய்ந்த குண்டுகள் சிங்கள ராணுவம், விடுதலை இயக்கங்கள், அமைதிக்கெனச்
சென்ற ராணுவப்படை போன்ற எல்லா இடங்களிலிருந்தும் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன.
தெரிவிக்க வேண்டிய செய்திகளைப் பாசாங்குகளற்றுத் துணிவுடனும் தெளிவுடனும் எழுதிச்
செல்லும் ஷோபா சக்தியின் எழுத்துகளில் அமைதியை எதிர்நோக்கும் கலகக்காரனின் அறை கூவலே
மேலோங்கி ஒலிக்கிறது. பொது ஊடகக் கருத்துகளோடு பொருந்தி நிற்கும் மனம் இவருடைய
கட்டுரையைப் படித்தபின் இலங்கை பற்றிய தன் சித்திரத்தை நிச்சயமாக மாற்றிக் கொள்ளும். தீவிர அரசியல் கட்டுரை, கலை இலக்கிய அலசலை அடிப்படையாகக்கொண்டு அரசியலைத் தீவிரமாகப்
பேசும் கட்டுரை என ஒன்று மாற்றி ஒன்று அமைந்த எட்டுக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பிது.
தனது சொந்த கிராமமான அல்லைப் பிட்டிக்கு நேர்ந்த அவலத்தில் ஆரம்பமாகும் முதல்
கட்டுரை முதல் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் மரணம் பற்றிய
செய்தியோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் இருந்ததைப் போகிற போக்கில்
தெரிவிக்கும் கடைசிக் கட்டுரைவரை பக்கத்திற்குப் பக்கம் இலங்கை மக்களின் குருதிக்
கறையே தென்படுகிறது. ஆணிவேர் திரைப்படத்தைக் கலைப் பொக்கிஷமாகக் கருதுவோரின் தலையில் குட்டிப்
புரஹந்தகளுவர, இர மத்திமய போன்ற சிங்களக் கலைப் படைப்புகள் குறித்து விரிவாக
அலசியுள்ளார். கலை மற்றும் இலக்கியப் படைப்புகள் துதிகளாவதையும் பிரச்சாரப்
பிரதிகளாகச் சுருங்கிப்போவதையும் கடுமையாகச் சாடுகிறார்.
இத்தொகுப்பின் பிரதானமானது அக்டோபர் எழுச்சி, சாதியொழிப்புப் போராட்டம், சாதியம்
குறித்து அலசும் நீண்ட கட்டுரையே. இதில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களின்
வளர்ச்சி பற்றி ஆதாரங்களோடு விளக்குகிறார். யாழ் நகர மேயரை நூலகத்தைத் திறக்கவிடாமல்
செய்தது, யாழ்ப்பாண மத்தியக் கல்லூரியின் முதல்வர் கணபதி இராஜதுரையைக் கொலைசெய்தது
என்பது போன்ற பல சான்றுகள் மூலம் விடுதலைப் புலிகளின் சாதிய ஒடுக்குமுறையை எடுத்துக்
கூறுகிறார்.
1947இல் ஜோன் ஜெனே எழுதிய Les Bonnes (பணிப்பெண்கள்) நாடகம் பற்றிய கட்டுரையில்
இந்நாடகம் வேலைக்காரிகளின் புத்தகமாகக் கருதப்படும்படியான ஒன்று என்கிறார். இது
எதிர்த்துக் கேட்க அகத்தில் தீராத விழைவிருந்தும் ஒத்துழைக்க மறுக்கும்
புறச்சூழல்களோடு போராடும் வேலைக்கார மனங்களில் புதைந்துகிடக்கும் கலகச் சக்திகளை
இயன்ற அளவு ஒன்றிணைக்கும் புத்தகம். எனவே, வேலைக்காரிகளின் புத்தகம் என்பது
இக்கட்டுரைத் தொகுப்புக்கான தலைப்பாகியிருக்கக்கூடும்.
ஐ.நா. சபையின் சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையை முன்வைத்து
எழுதப்பட்ட கட்டுரையில் இலங்கையில் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்பு
நடந்த அரசியல் படுகொலையின் குத்துமதிப்பான விவரக் கொத்தை அது தந்திருப்பதாக எள்ளல்
தொனிக்கத் தெரிவிக்கிறார். இடதுசாரி, முஸ்லிம் அரசியல் தலைமைகளின் குரல் அறிக்கையில்
தவிர்க்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். புலிகள் தனி அரசாங்கம் நடத்துவதைப்
போலத் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கடுமையாக மறுக்கிறார். அரசு, புலிகள்
இரண்டின் மனித உரிமை மீறல்களையும் விவரமாகக் கூறி இருதரப்பும் சர்வதேசக்
கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று பிலிப் கூறுவதன் உட்பொருளை
உணர்த்துகிறார் ஷோபா சக்தி.
தம்பி விமரிசனம் வழியாகத் திரைத் துறையின் மோகத்தால் பித்துப்பிடித்து அலைவதையும்
புரட்சிக்குரியவர்களின் படங்களையும் மேற்கோளையும் காட்டுவதால் மட்டுமே ஒரு படம்
புரட்சிப் படம் என நம்பும் அரைவேக்காட்டுத் தனத்தையும் தனக்கே உரிய நக்கலுடன்
சாடுகிறார். சி. புஷ்பராஜாவின் நூலை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் புலிகள் மற்றும் புலி
ஆதரவாளர் தவிர்த்த மற்றொரு வரலாறு என்னும் வகையில் நூலை வரவேற்கிறார். ஈழப்
போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கைப் புலிகளின் வரலாறு இருட்டடிப்புச்
செய்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.
மொத்தத்தில், தமிழர், சிங்களர் என்னும் வேறுபாடின்றிப் பயங்கரவாதத்திற்கும்
வன்முறைக்கும் பலியாகும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு குறித்த கவலையும் கோபமும்
வெளிப்படுகின்றன, கட்டுரைகளில். புலிகளின் பாசிசச் செயல்பாடுகள், அரச பயங்கரவாதம்,
ஏகாதியபத்திய எதிர்ப்பு இவையனைத்துக்கும் எதிராகப் போராட வேண்டியதின் அவசியத்தை
வலியுறுத்துகிறார். தலித்துகள், முஸ்லிம்கள் இருவருக்காகவும் பெருமளவில்
வாதாடுகிறார். கேள்விகளற்ற விசுவாசங்கள்மீது கட்டப்பட்ட பலமான இயக்கமான விடுதலைப் புலிகளின்
அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்யும் கேள்விகளை ஆதாரங்களுடன் அடுக்கியுள்ளார். விசுவாசங்களுக்குப் பழகிய மனத்தின் எதிர்ப்பையும் கலகக்கார மனத்தின் பெருத்த
ஆதரவையும் ஒரே சமயத்தில் ஈட்டிக்கொள்ளும் புத்தகம் இது.
வெளியீடு:
கருப்புப் பிரதிகள்
45ஏ, இஸ்மாயில் மைதானம்
லாயிட்ஸ் சாலை, சென்னை 5
முதல் பதிப்பு: ஜனவரி 2007.
பக். 144. ரூ. 64.99
காலச்சுவடு 2007 செப்டம்பர் இதழில் வெளியானது.