ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2018

மறைந்தும் மறையாச் சூரியன்

அண்ணா சாலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி

இந்தியா விடுதலையடைந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் தலைகீழ் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை அரியணையில் அமர்ந்திருந்த, பலம் பொருந்திய தேசியக் கட்சியான காங்கிரஸை 1967 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தது மாநிலக் கட்சியான திமுக. அதன் முதல் முதலமைச்சரான அண்ணாத்துரை ஈராண்டுகளுக்குள், 1969இல் மறைய, கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் வரிசையிலிருந்த மு.கருணாநிதி முன்னேறினார்; முதலமைச்சரானார். திராவிட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியான திமுக ஒடுக்கப்பட்டோரின் நலனையும் சமூக நீதியை நிலைநாட்டுவதையும் தன் முக்கியக் கடமைகளாகக் கொண்டிருந்தது. தந்தை பெரியாரிடம், அறிஞர் அண்ணாவிடம் அரசியல் பாடம் கற்றறிந்த முதலமைச்சர் கருணாநிதியும் இது விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டிருந்தார். 

ஒடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடும்போது அதன் முதல் வரிசையில் இருப்பவர்கள் பெண்கள். சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக் குடும்பங்களிலும் பெண்களுக்கு எதிராக நிலவும் ஒடுக்குமுறைகள் ஒன்றல்ல; ஓராயிரம். அவை அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிய மிகப் பெரிய சமூக மாற்றம் தேவை. அந்த மாற்றத்துக்கான விதை தூவிய பெரியாரின் வழியில் அண்ணாவை அடியொற்றி நடைபோட்டவர் மு.கருணாநிதி. அதற்கான சான்றுகளாக கருணாநிதி கொண்டுவந்த மகளிருக்கான திட்டங்களைச் சொல்லலாம். அந்தத் திட்டங்களால் பயனடைந்த பெண்கள், கருணாநிதி மறைந்த மறுநாள் ஆகஸ்ட் 8 அன்று நிகழ்ந்த கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீரும் கம்பலையுமாகக் கலந்துகொண்டார்கள். தங்கள் வாழ்வில் மலர்ச்சி காண விரும்பிய தந்தையாக, தமையனாக, தனயனாகச் செயல்பட்ட அம்மனிதரின் மரணம் அவர்களை உலுக்கியது. ஆகவே, கட்சி வேறுபாடின்றி அவருக்குத் தங்கள் நன்றியை அஞ்சலியாகச் செலுத்தினார்கள்.

காவேரி மருத்துவமனை முன்பு

மகளிருக்காக அவர் கொண்டுவந்த திட்டங்களைச் சிந்தித்துப் பார்த்தால் மகளிர் நலனுக்காக கருணாநிதி உண்மையிலேயே செயல்பட்டாரா இல்லையா என்பதை உணர்ந்துகொள்ளலாம். பெண்களின் பெரும் பிரச்சினைகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களது கல்வியும் திருமணமுமே முன்னிலையில் நிற்கும். ஆகவே, பெண்கள் கல்வி கற்கவும் மணமுடிக்கவும் திட்டங்கள் வேண்டும். சரி மணமுடித்த பெண்கள் கணவனை இழந்தால் கைம்பெண்ணாகிவிடுகிறார்களே அவர்களுக்கும் உதவ வேண்டுமே. இன்னும் பெண்களில் சிலர் திருமணமே வேண்டாம் என முடிவெடுக்கக்கூடும் அவர்களை அப்படியே விட்டுவிட முடியாதே அவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். ஏழை எளிய பெண்களுக்கு இவை எல்லாம் உதவும், சொத்து நிறைந்த குடும்பத்துப் பெண்களுக்கு என்ன செய்வது? அந்தச் சொத்தில் சம உரிமையைப் பெற்றுத்தர வேண்டியது அவசியம்தானே? சரி அரசியல் ஈடுபாடுகொண்ட பெண்களை அரசியலிலும் ஈடுபடுத்த வேண்டுமே. அதற்கும் திட்டம் உண்டு. இப்படிப் பெண்கள் மீது அக்கறை கொண்டு எந்தவகையிலும் எந்தத் தரப்புப் பெண்ணும் விடுபட்டுவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கையுடன் எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உதவும்படியான திட்டங்களை முன்னெடுத்ததில் கருணாநிதியின் கூர்மதியும் பங்களிப்பும் காலகாலத்துக்கும் நினைவுகூரத்தக்கவை.

கணவன் இறந்துவிட்டால் பெண்ணுக்கு வாழ்வே முடிந்துவிட்டது என்ற சமூகத்தின் அறியாமையை அகற்ற கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வது அவசியம். அதற்கு உதவும் வகையில், கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கும் நோக்கத்தில் 1975ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம். கைம்பெண்களின் மறுவாழ்வை ஊக்கப்படுத்தவும் அவர்களின் மறுமணத்துக்கு ஆதரவு தரவுமான நிதியுதவித் திட்டம் இது. இந்தத் திட்டத்தில் அப்போது 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. 2009இல் இது 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் உதவிபெற வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. திருமணத்துக்கு உதவும் அதே நேரம் திருமணம் செய்து கொள்ள விரும்பாத கைம்பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்தார் அவர். அது, 1975 ஜூன் 1 அன்று கொண்டுவரப்பட்ட ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகைத் திட்டம். 18 வயசுக்கு மேற்பட்ட கைம்பெண்களுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே உழைத்துப் பிழைக்க விரும்பும் 20 முதல் 40 வயது கொண்ட பெண்களுக்கு உதவுவதற்காக, சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975இல் அறிமுகப்படுத்தினார் கருணாநிதி.

கலைஞர் மறைந்த அன்று காவேரி முன்பு

ஆண்களின் கல்வி குடத்து நீரெனில் பெண்களின் கல்வி குளத்து நீர். அதனால் சமூகமே பயனடையும். ஆகவே, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பெண்களின் கல்விக்கு உதவும்வகையில் பெரியார் ஈ.வே.ரா.நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை 1989-90இல் கொண்டுவந்தார்.  வருட வருமானம்  24 ஆயிரத்துக்குட்பட்ட எளிய குடும்பத்துப் பெண்கள் பட்டப் படிப்பு படிக்க உதவும் திட்டம் இது.

1989இல், கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று கொண்டுவந்த மற்றொரு திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். இது திருமண உதவித் திட்டம் என்றபோதும் மறைமுகமாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் திட்டமாகவும் செயல்படுகிறது. குடும்பத்தின் வருட வருமானம் 72 ஆயிரத்துக்குட்பட்ட ஏழை எளிய பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் அமைந்த திட்டம் இது. நிதி உதவி பெற விரும்பும் பெண்கள் பத்தாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி. எனவே, இந்தத் திட்டம் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. பழங்குடியினப் பெண்கள் 5ஆம் வகுப்புவரை படித்திருந்தால் போதும் என்பதைப் போன்ற விதிகளைக் கருத்தூன்றிக் கவனிக்கும்போது திட்டங்கள் பயனாளிகளுக்குப் போய்ச்சேருவதிலும் அவர் கொண்டிருந்த அக்கறை விளங்கும்.  

கலைஞரின் இறுதி ஊர்வலம்

பெண்களது சமூகச் செயல்பாட்டையும் நிர்வாகத் திறனையும் வளர்க்க உதவும் வகையில், 1989ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தர்மபுரியில் தொடங்கிவைத்த திட்டம் மகளிர் சுய உதவிக் குழு. கிராமப்புறப் பெண்கள் சிறு குழுவாக ஒருங்கிணைந்து வாழவும், வருமானம் ஈட்டவும் உதவிய திட்டம் இது. 1989இல் செய்யப்பட்ட சட்ட திருத்தத்தின்படி ஆண்களைப் போல் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவையும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்டன. மாற்றுப்பாலினத்தவருக்குத் திருநங்கைகள் என்ற கவுரவமான பதத்தை வழங்கியதுடன் அவர்கள் மரியாதையான வாழ்வு நடத்துவதை ஆதரிப்பதற்காகத் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் ஒன்று 15.4.2008 அன்று தொடங்கப்பட்டது. அதுவரை மாற்றுப்பாலினத்தவரை ஏளனத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட இந்த நடவடிக்கை உதவியது.

திருமணமே செய்துகொள்ள விரும்பாத பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்திருக்கிறார் கருணாநிதி. அது 2008 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்ட முதிர்கன்னி உதவித் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் திருமணமாகாத 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி உதவி கிடைக்கிறது.

அஞ்சலி சுவரொட்டி

கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே செய்யப்பட்டன. அவர் கையிலிருந்து பணம் போட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. ஆனால், அத்தகைய திட்டங்கள் அவசியம் என்பதை உணர, முன்மொழிய, வழிமொழிய மகளிரின் துயரம் அறிந்த முதலமைச்சர் தேவைப்பட்டார். அந்த முதலமைச்சராக இருந்தார் கருணாநிதி. திட்டங்கள் தீட்டுவதில் வெறுமனே கடமையைத் தட்டிக்கழித்தால் போதும் என்று செயல்பட்டவரல்லர் அவர். திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து பயனாளிக்கான விதிகளைத் தீர்மானிப்பது வரை ஒவ்வொன்றிலும் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டுச் செயல்படுத்தியிருக்கிறார் அவர். அது மாத்திரமல்ல; யாருக்காகத் திட்டங்கள் தீட்டப்பட்டனவோ அந்தப் பயனாளிகளைத் திட்டங்கள் சென்றடைகின்றனவா என்பதை விசாரித்தறிவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். இவற்றை எல்லாம் விசாரித்து அறியும்போது அவரது தொலைநோக்குப் பார்வை புலப்படுகிறது. இருட்டறையில் முடங்கிக் கிடந்த மகளிருக்கு உதயசூரியனின் பேரொளியைக் காட்டிய கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் இவை. அதனால்தான் தமிழ்ப் பெண்களின் நெஞ்சம் நிறைந்த தலைவராயிருக்கிறார் இன்று அவர்.

(பெண்களுக்காகவும் சுடர்ந்த சூரியன் என்னும் தலைப்பில் 2018 ஆகஸ்ட் 12 அன்று பெண் இன்று இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம் இது.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக